கோவை பேரூராட்சிகளில் மறு வரையறை பணி முடக்கம்

கோவை, மே 9: கோவை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் வார்டு மறு வரையறை பணி முடக்கப்பட்டுள்ளது. ேகாவை மாவட்டத்தில் சூலூர், கிணத்துக்கடவு, மதுக்கரை, செட்டிபாளையம், ெதாண்டாமுத்தூர், கோட்டூர் உட்பட 37 பேரூராட்சி அமைந்துள்ளது. இதில் 585 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளை மறு வரையறை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள், பொதுமக்கள் தரப்பில் வார்டு மறு வரையறை தொடர்பான விண்ணப்ப மனுக்களை தரலாம் என தெரிவிக்கப்பட்டது.
 
 தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, மதுக்கரை, செட்டிபாளையம், கிணத்துக்கடவு, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அதிக வார்டுகள் மறு வரையறை திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. பொதுமக்களின் விண்ணப்பங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு தரப்பட்டது. பேரூராட்சி பகுதிகளில் முதல் கட்டமாக 226 விண்ணப்பங்களும், கால கெடு நீட்டிக்கப்பட்டு 500க்கும் மேற்பட்ட  வார்டு மறு வரையறை தொடர்பான விண்ணப்பங்களும் பெறப்பட்டது.  ஒரு ஆண்டாகியும், வார்டு மறு வரையறை செய்யப்படவில்லை. சில பேரூராட்சிகளில் வார்டு மறு வரையறை தொடர்பான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை என கூறப்படுகிறது.


 ஆளுங்கட்சியினர் வார்டுகளை வரையறை செய்ததில் குளறுபடி ஏற்படுத்தியிருப்பதாகவும், பொது, ஆண், பெண் வார்டு பிரிப்பதில் குழப்பம் செய்திருப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு உத்தேச வார்டு பட்டியல் சில மாதம் முன் வெளியானது. ஆனால் பேரூராட்சியில் உத்தேச பட்டியல் கூட வெளியிடப்படவில்லை. வார்டு மறு வரையறை பணிகளை அரசியல் காரணங்களுக்காக முடக்கி வைத்திருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் கேட்ட போது, ‘‘ வார்டு விவரங்கள் மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறுதி செய்த பின்னர் கெஜட்டில் வெளியிடப்படும், எப்போது என எங்களுக்கே தெரியவில்லை, ’’ என்றனர்.

Tags : townships ,Coimbatore ,
× RELATED கம்பம் அருகே தரமின்றி நடைபெறும் குடிமராமத்து பணி