×

4 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுப்பு

கோவை, மே9: கோவையில், 4 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் மரபணு சோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது.  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதி தங்கையாபுரத்தை சேர்ந்த நைனார் என்பவரின் மகள் மல்லிகா(31). மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மல்லிகா கர்ப்பமடைந்தார். அதற்கு காரணமான அவரது உறவினர் ஒருவர் திருப்பூரில் உள்ள மல்லிகாவின் உறவினர் வீட்டில் அவரை விட்டு விட்டு தப்பி சென்று விட்டார். இதனை தொடர்ந்து பிரசவத்திற்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

 இந்நிலையில் குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டதால் 4 மாதங்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. மல்லிகா மற்றும் அவருடைய உறவினர்கள் வெளியூரை சேர்ந்தவர்கள் என்பதால் மருத்துவர்களின் அறிவுரைப்படி, சிங்காநல்லூரில் உள்ள ஆத்மா அறக்கட்டளையின் மூலம் சிங்காநல்லூர் மயானத்தில் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் 4 மாதம் கழித்து மல்லிகாவின் அண்ணன் பாலசந்திரன் தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் போலீஸ் நிலையத்தில், தனது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து தப்பியோடிய முத்து என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்திருந்தார்.
இதனை தொடர்ந்து குழந்தையின் தந்தை யார்? என்பதனை உறுதி செய்ய மரபணு பரிசோதனைக்காக குழந்தையின் உடல் தேவை என்று ஸ்ரீவைகுண்டம் போலீசார் கோவை கலெக்டர் ராசாமணியிடம் மனு அளித்தனர்.

 இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் குழந்தையின் உடலை தோண்டி எடுக்கும் பணி நேற்று முன்தினம் மாலை நடந்தது. தாசில்தார் தேவநாதன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் கருணாநிதி, சட்டம் சார்ந்த மருத்துவதுறை பேராசிரியர் ஜெய்சிங் ஆகியோர் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. மரபணு சோதனைக்கு பின்னர் மல்லிகாவை பலாத்காரம் செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : baby ,
× RELATED பச்சிளம் ஆண் குழந்தை கொல்லப்பட்ட...