×

தனியார் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய குடிசைகளை அகற்ற எதிர்ப்பு நரிக்குறவர்கள் சாலை மறியல் போராட்டம்

ஆவடி, மே 9: ஆவடி அருகே திருமுல்லைவாயலில் தனியார் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய குடிசைகளை அகற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்து நரிக்குறவர்கள் சாலை மறியல் செய்தனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் 40 பேர் கைது செய்யப்பட்டனர். திருமுல்லைவாயல், செந்தில்நகரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் என்ற வாசு (58). தொழிலதிபர். இவருக்கு, பழைய காவல் நிலையம் அருகே சிடிஎச் சாலையில் 23 கிரவுண்டு காலி இடம் உள்ளது. இதற்கு பின்புறம் உள்ள 10 கிரவுண்டு இடத்தில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் சிலர் வாசு இடத்தை ஆக்கிரமித்து குடிசை அமைத்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வாசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த மார்ச் 15ம் தேதி ஆக்கிரமிப்பை அகற்ற 3 வாரம் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.  
இதற்கிடையே போலீசார் தேர்தல் பணியில் இருந்ததால் ஆக்கிரமிப்பை அகற்ற உடனடியாக பாதுகாப்பை வழங்கவில்லை. இதனால் இடத்தின் உரிமையாளர் வாசு மீண்டும்  உயர்நீதிமன்றத்தை நாடியதையடுத்து உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உரிய பாதுகாப்பு உடனடியாக வழங்க வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன், ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் ஜான் சுந்தர், திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடங்கினர். அப்போது 40க்கு மேற்பட்ட நரிக்குறவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்தனர். அவர்களில் சிலர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.     இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.ஆனால் அவர்கள் குடிசை வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே போலீசார் 40 பேரை வலுக்கட்டாயமாக  கைது செய்து அவர்களை திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதன் பின்னர், போலீசார் பாதுகாப்புடன் 10க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். குடிசைகளை அகற்ற நரிக்குறவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது ஆக்கிரமிப்பு குடிசைகளுக்கு திடீரென மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு  பதற்றம் அதிகரித்தது. உடனடியாக போலீசாரும், தீயணைப்பு வீரர்களும்  விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள், 2 குடிசைகள் எரிந்து நாசமானது.

Tags :
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...