×

மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் சுற்றியுள்ள கிராமங்களில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதி

மதுராந்தகம், மே 9: உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர். ஊராட்சி தலைவர்கள் இருந்தபோது, பொதுமக்களும்   வார்டு உறுப்பினர் உள்ளிட்ட ஊராட்சி பிரதிநிதிகளிடம் சந்தித்து உரிமையாக கேள்வி எழுப்புவார்கள். அப்போது, ஓரளவிற்கு பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் வேலை செய்வார்கள், அதனால், பொது மக்களின் பிரச்னைகள் எளிதில் தீர்க்கப்படும். ஏனெனில், பொதுமக்களின் வாக்குகள் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மீண்டும் மீண்டும் தேவைப்படுவது. இதனால், பிரதிநிதிகள் ஓரளவிற்கு பொதுமக்களுக்கு பயந்தே வேலை செய்தார்கள் எனக் கூறலாம். இது மட்டுமின்றி கிராமங்களில் உள்ள உடல் ஊனமுற்றோர், முதியோர், கணவனை இழந்த பெண்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தங்களுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையினை பெறுவதற்கு அவர்கள் அரசு அதிகாரிகளிடம் நடையாய் நடக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த பணிகளை உள்ளாட்சி பிரதிநிதிகளே செய்து கொடுத்துவிடுவார்கள். ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் குறைபாடுகள் இருந்தால் மக்கள் இவர்களின் மூலமே தீர்வு கண்டிருக்கிறார்கள்.

இது மட்டுமின்றி ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி ஊரக வளர்ச்சி அதிகாரிகளை நேரில் அழைத்து வந்து தங்களின் ஊராட்சி குறைகளை தெரிவித்து அவற்றை சரி செய்வார்கள். இது போன்ற பொதுப் பணிகள் தவிர்த்து ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் நடைபெறும் அனைத்து விசேஷங்களிலும் இந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறு சிறு உதவிகளை செய்வார்கள். தற்போது ஊராட்சிகளில் உள்ள மக்கள் தங்களின் எந்த ஒரு குறைபாடாக இருந்தாலும் ஊராட்சி செயலரை அணுக வேண்டும். அவர்களுக்கு மக்களின் ஓட்டுக்கள் தேவையில்லை. எனவே, அவர்களிடமிருந்து மக்களுக்கு முறையான பதில்களும் வருவதில்லை. எப்போது கேட்டாலும் ஊராட்சியில் நிதி இல்லை. பணம் வந்தால் பார்த்துக் கொள்ளலாம். இதற்கு முன்பு வேறு ஒரு பிரச்சினை உள்ளது; அதை முடித்துவிட்டு தான் இதை செய்ய முடியும். வேண்டுமென்றால், நீங்கள் வட்டார வளர்ச்சி அலுவலரை சென்று சந்தியுங்கள் என பொறுப்பற்ற பதில்கள் வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அவர்களும் ஊராட்சி செயலரை தாண்டி எந்த அதிகாரியை எங்கே சந்திப்பது என தெரியாமல் இருந்து விடுகின்றனர்.

இது போன்ற நிலைமைகள் காரணமாக பெரும்பாலான ஊராட்சிகளில் எவ்வித பணிகளும் நடைபெறாமல் அனைத்தும் செயலற்ற நிலையில் காணப்படுகின்றன. இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளபுத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் விஜயகுமார் கூறுகையில், ‘‘பொது மக்களின் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும். தற்போது, ஊராட்சிகளில் ஆட்கள் இல்லை. பொதுமக்களும் எந்த பிரச்சனைக்கு எந்த அதிகாரியை சந்திக்க வேண்டும் என தெரியாமல் இருந்து விடுகின்றனர். மகாத்மா காந்தி ஊரக வேலையில் பணி செய்பவர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. இதேபோன்று மோகல்வாடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கலியுக கண்ணதாசன் என்பவர் கூறுகையில், ‘உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்த நேரங்களில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் தலைவரின் முன்னிலையில்  இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்.மேலும், அது போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கப்படும்.

ஆனால், தற்போது ஒவ்வொரு ஊராட்சிகளிலும் அதிகப்படியான குடும்ப பிரச்சனைகள், வன்கொடுமை பிரச்சனைகள், பாலியல் பிரச்சினைகள் போன்றவை தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் நடந்தவாறு உள்ளது. மேலும், கள்ளச்சாராய விற்பனை பாலியல் வன்கொடுமைகள் போன்றவைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையங்களில் கிராமப்புற பகுதிகளில் இருந்து பெறப்பட்ட புகார்களை விட தற்போது மிக அதிகம். இதேபோன்று பொதுமக்கள் பல வகைகளிலும் பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது’ என்றார்.நாம் கூறியிருப்பது ஊராட்சி அளவிலான விஷயம் மட்டுமல்ல ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மாநகராட்சிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருந்துவதாகவே உள்ளது. எனவே, விரைவாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.   

Tags : villages ,facilities ,
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு