×

அணைக்கட்டு அருகே கோலாகலம் பக்தர்கள் வெள்ளத்தில் பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா


அணைக்கட்டு, மே 9: அணைக்கட்டு அருகே பக்தர்கள் வெள்ளத்தில் பொற்கொடியம்மன் ஏரித்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் குடும்பத்துடன் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா வல்லண்டராமம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பொற்கொடியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி புதன்கிழமை வேலங்காடு ஏரியில் அமைந்துள்ள தாய் வீடான ஏரியில் உள்ள கோயிலுக்கு அம்மன் தேர் வரும் நிகழ்வு, புஷ்பரத ஏரிதிருவிழாவாக நடைபெறும். பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான இந்த திருவிழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு ஏரியில் அமைந்துள்ள பொற்கொடியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது.

விழாவை முன்னிட்டு வேலூர், அணைக்கட்டு, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, பென்னாத்தூர், கணியம்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாட்டுவண்டி, டிராக்டர், லாரிகளில் பச்சை ஓலைகட்டிகொண்டு நேற்று முன்தினம் இரவு முதல் கோயிலுக்கு வரத்தொடங்கினர்.தொடர்ந்து ஆடு, கோழி ஆகியவற்றை கோயில் முன் அமைந்துள்ள ஆலமரத்தடியில் பலியிட்டும், மாவிளக்கேற்றி பொங்கல் வைத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இந்நிலையில், ஏரித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான புஷ்பரத தேரோட்டம் நேற்று நடந்தது. இதில், காப்புகட்டி விரதம் இருந்த 300க்கும் மேற்பட்டோர், அலங்கரிக்கப்பட்ட தேரை தோள்மீது சுமந்தபடி கோயிலை சுற்றி வந்து நிலைநிறுத்தினர். முன்னதாக வல்லண்டராமம் கிராமத்தில் இருந்து புறப்பட்ட தேர் அன்னாசிபாளையம் வழியாக வேலங்காடு ஏரியை வந்தடைந்தது.அப்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர், மேலும் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் மீது தூவி தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் சப்-கலெக்டர் மெகராஜ், தாசில்தார் பெருமாள், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் குமார், திமுக மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பாபு, ஆவின் தலைவர் வேலழகன், பிடிஓக்கள் இமயவரம்பன் உட்பட பலர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.திருவிழாவையொட்டி வேலூரிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கபட்டன. விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு வழிநெடுகிலும் உள்ள கிராம மக்கள் ஆங்காங்கே பந்தல்கள் அமைத்து நீர், மோர், பானம், கூழ், அன்னதானம் ஆகியவற்றை வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து, மாலையில் வேலங்காடு கிராமத்தில் புஷ்பரத தேர் வீதிஉலாவும், இரவு தங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் நிறைவாக நாளை மறுதினம் மீண்டும் வல்லண்டராமம் ஊர்கோயிலுக்கு தேர் வந்தடையும். விழாவையொட்டி பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஈடுபட்டிருந்தனர்.இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் விஜயா, ஆய்வாளர் ரவிக்குமார், கோயில் செயல் அலுவலர் பரந்தாமகண்ணன் மற்றும் 4 கிராம மேட்டுகுடிகள், பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Tags : Polladodiyamman Pushpara ,gorge ,dam ,
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...