×

அரக்கோணம்- ஜோலார்பேட்டை இடையே ரயில் கொள்ளை சம்பவங்களை தடுக்க 115 போலீசார் கண்காணிப்பு

வேலூர், மே9: அரக்கோணம்-ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதமாக 115 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்பாடி ரயில் நிலையம் அருகே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அடுத்தடுத்து ரயில் கொள்ளை சம்பவங்கள் நடந்தன. அதிகாலையில் ஓடும் ரயிலில் ஏறிய வடமாநில கொள்ளை கும்பல் பயணிகள் தூக்க கலக்கத்தை பயன்படுத்தி பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றது. இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரயில்வே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வடமாநில கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. ரயில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் ஜார்கண்ட் மாநிலத்திற்கு விரைந்தனர். அங்கு உள்ளூர் போலீசார் உதவியுடன் கொள்ளை கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால், உள்ளூர் போலீசார் தமிழக போலீசாருக்கு உதவ மறுத்துவிட்டனர். இதனால் கொள்ளையர்களை தேடிச்சென்ற தனிப்படை போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

காட்பாடி ரயில் கொள்ளையர்கள் பிடிபடாத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம், ஈரோடு வழியாக சென்ற 5 ரயில்களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இதனை அறிந்த ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ரயில் கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே ரயில்களில் நடைபெறும் தொடர் கொள்ளை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உள்ளூர் போலீசார் உதவியை ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் கோரினர். அதன்படி, காட்பாடி-ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே அடிக்கடி நடைபெறும் ரயில் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதமாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து 115 ஆயுதப்படை போலீசார் காட்பாடி ரயில் நிலையம் மற்றும் ஓடும் ரயில்களில் பயனிகளின் பாதுகாப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், ‘காட்பாடி- சித்தூர், அரக்கோணம்- ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதமாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து 115 ஆயுதப்படை போலீசார் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓடும் ரயில்களில் இரவு நேரத்தில் பயணம் செய்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் பயணிகள் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். டார்ச் லைட், விசில் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் ரயில்களில் தனித்தனி குழுக்களாக பயணம் செய்து கொள்ளை சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்’ என்றனர்.

Tags : policemen ,train robberies ,Jolarpettai ,Arakkonam ,
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்