×

அண்ணாமலையார் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் பிரம்ம தீர்த்தத்தில் வருண ஜபம்

திருவண்ணாமலை, மே 9: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் மற்றும் வருண ஜபம் நடந்தது. தமிழகத்தில் மழைக்காக கோயில்களில் யாகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. அதன்படி, அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்களில் சிறப்பு யாகம் நடந்து வருகிறது. மேலும், தண்ணீரில் நின்றபடி வருண ஜபம் செய்யவும், இசை வழிபாடு நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மழை வேண்டி, சுவாமிக்கு ருத்ர அபிஷேகம் நேற்று நடந்தது. அதைத்தொடர்ந்து, கோயில் 5ம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் கழுத்தளவு தண்ணீரில் நின்றபடி வருண ஜபம் நடத்தினர்.

மேலும், கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. அதேபோல், நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை இசை கருவிகளில் அமிர்தவர்ஷினி, மேக வர்ஷினி, கேதாரி, ஆனந்த பைரவி, ரூபகல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, திருஞானசம்மந்தரின் முதலாம் திருமுறையில் தேவார மழை பதிகம் மேக ராக குறிஞ்சி பண்ணில் பாடினர். மேலும், நாதஸ்வர இசைக்கலைஞர் பிரம்ம தீர்த்தத்தில் நீந்தியடி இசை வாசித்தார். அக்னி தலம் என்பதால், நந்தி பெருமானுக்கு நீர் தொட்டிக்கட்டி தண்ணீர் நிரப்பி நடத்தும் வழிபாடு அண்ணாமலையார் கோயிலில் நடைபெறவில்லை. மழை வேண்டி நடந்த சிறப்பு யாகத்தில், கோயில் இணை ஆணையர் ஞானசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Annamalaiyar ,Yagam ,Brahma Theertham Varuna Japa ,
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...