×

செய்யாறு அருகே மணல் கடத்தலை தடுத்த எஸ்ஐக்கு கொலை மிரட்டல் மணல் கொள்ளையன் கைது

செய்யாறு, மே 9: செய்யாறு அருகே மணல் கொள்ளையை தடுத்த எஸ்ஐக்கு கொலை மிரட்டல் விடுத்த மணல் கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஆற்றுப்பகுதியில் லாரி, டிராக்டர், லோடு ஆட்டோ, மாட்டு வண்டி உட்பட பல்வேறு வாகனங்களில் தினசரி மணல் கடத்தப்படுகிறது. இதுகுறித்து, போலீசார் பல வழக்குகள் பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இருப்பினும் மணல் திருட்டு குறையவில்லை. மேலும், சமீபகாலமாக பைக்குகளிலும் மணல் கடத்தப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, போலீசார் தட்சிணாமூர்த்தி, புருஷோத்தமன் ஆகியோர் செய்யாற்றுப்படுகையில் மணல் கடத்தல் தடுப்பு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, தொழுப்பேடு கிராமம் சுடுகாடு அருகே சென்றபோது, அவ்வழியாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.

ஆனால், டிராக்டர் ஓட்டிவந்த நபர் வண்டியை நிறுத்தாமல் சென்றதுடன் தடுத்தால் 3 பேர் மீதும் டிராக்டர் ஏற்றி கொலை செய்து விடுவேன் என மிரட்டினாராம். இதையடுத்து, போலீசார் டிராக்டரை மடக்கி பிடித்து டிரைவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அதே கிராமத்தை சேர்ந்த பொன்னன்(44) என்பதும், இவர் பல ஆண்டுகளாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sand robbery ,SI ,sand mishap ,Kodar ,
× RELATED டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் பதுக்கிய 2 பேர் கைது