×

கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் அக்னி சட்டி ஊர்வலம்

கோவில்பட்டி, மே 9:  கோவில்பட்டியில் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  விழா நாட்களில் தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. 9வது நாள் திருவிழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு பக்தர்கள் தெற்கு நந்தவனத்தில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் கோயிலில் அம்பாளுக்கு பாலாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மாலை 5 மணிக்கு பெண்கள் மாவிளக்கு ஏந்தி மேளதாளம் முழங்க நகர்வலம் வருதலும், தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு வேண்டுதலும், பூச்சட்டிகள், 21 அக்னி சட்டி, 54 அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் செண்டா மற்றும் மேளதாளம் முழங்க நகர்வலம் வருதலும் நடந்தது.

பின்னர் இரவில் வண்ண ஊர்தியில் அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளி குடையின்கீழ் வீற்றிருந்து தங்கக்குடம், வாளி ஏந்தி தீர்த்தம் எடுக்கும் திருக்கோலத்துடன் எழுந்தருளி வீதி உலா நடந்தது. விழாவில் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிசெல்வம், உபதலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், கோவில் தர்மகர்த்தா மாடசாமி, கோவில் செயலாளர் மாணிக்கம், பொருளாளர் கணேசன், சங்கம் மற்றும் கோயில் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Agni Satti Procession ,festival ,Kovilpatti Pettahaliyammamman Temple Chithirai ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!