×

திருச்செந்தூர் அருகே அம்மன்புரம் குளம் ஷட்டர் உடைப்பு

திருச்செந்தூர், மே. 9: திருச்செந்தூர் அருகே 12 குளங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் அம்மன்புரம் பெரியகுளம் ஷட்டர் உடைப்பால் 250 ஏக்கர் நில விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர். திருச்செந்தூர் அருகே அம்மன்புரத்தில் பெரியகுளம் உள்ளது. திருவைகுண்டம் தென்கால் மூலம் கடம்பாகுளம் வழியாக இந்த குளத்திற்கு தண்ணீர் வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள திருச்செந்தூர் ஆவுடையார்குளம், நத்தகுளம், நாலாயிரமுடையார் குளம், துலுக்கன்குளம் ஆறுமுகநேரி குளம், நல்லூர், மற்றும் குரும்பூர் குளம் என 12 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. 5 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுகிறார்கள்.

அம்மன்புரம் பெரிய குளத்தில் உள்ள 10ம் நம்பர் ஷட்டர் உடைந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த ஷட்டர் வழியாக தண்ணீர் தேங்காமல் வீணாகிறது. இதைபார்த்த அப்பகுதி விவசாய சங்கத்தினர் மணல் மூட்டைகளை வைத்து அடைத்து பார்த்தனர். அதனால் தாக்குபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து திருவைகுண்டம் பொதுப்பணித்துறை நீர்பாசனம் உதவி செயற்பொறியாளர் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் ஆகியோரிடம் பல முறை மனுக்கள் கொடுத்தும் எந்த பலனும் இல்லை. இதுகுறித்து காணியாளன்புதூர் விவசாய ஒப்படி சங்க தலைவர் ஜெயஆதித்தன், பொரு ளாளர் மாயாண்டி ஆகியோர் உதவி செயற்பொறியாளரிடம் மனு கொடுத்துள்ளனர். அதில் ‘10ம் நம்பர் மடையில் மூடு கதவு இல்லை. அந்த மடையில் இருந்து 250 ஏக்கர் நிலம் பயன்பெறுகிறது. ஷட்டர் பழுதால் அந்த விவசாயிகள் நெல் மற்றும் வாழை சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். உடனே ஷட்டரை பழுது பார்த்து தரவேண்டும். இல்லா விட்டால் விவசாயிகளை திரட்டி பெரிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tiruchendur ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...