×

கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் காட்சி பொருளாக மாறிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

கடையநல்லூர், மே 9: கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்  பழுதாகியும் 6 மாதங்களாக சரிசெய்யப்படாததால் காட்சி பொருளாகவே மாறிவிட்டது. இதனால் சுகாதாரமான குடிநீர் கிடைக்கப் பெறாமல் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு குமந்தாபுரம், சுந்தரேசபுரம், பொய்கை, அச்சம்பட்டி, மங்களாபுரம், காசிதர்மம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தினமும் இங்கு வருகைதந்து பல்வேறு வகையான சிகிச்சை பெறஅறு செல்கின்றனர். இம்மருத்துவமனையில் கடந்த 2015-16ம் நிதியாண்டில் அப்போதைய அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஒதுக்கீடு செய்த தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நோயாளிகள் நலன்கருதி ரூ.3 லட்சம் மதிப்பீட்டிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக விளங்கிய இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் கடந்த சுமார் 6 மாதத்திற்கும் முன்பாக பழுதடைந்தது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மருத்துவமனைக்கு வருகை தரும் புற நோயாளிகள் குடிநீர் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் காசு கொடுத்து குடிநீர் பாட்டில் வாங்கவேண்டிய நிலை உள்ளது. இதைப் போக்கும் விதமாக பழுதடைந்துள்ள சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Drinking water treatment plant ,Kadayanallur Government Hospital ,
× RELATED கமுதி அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு