×

தரம் உயர்த்தப்பட்டபோதும் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவ வசதி இல்லை பூங்கோதை எம்எல்ஏ குற்றச்சாட்டு

நெல்லை, மே 9: ஆலங்குளம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டபோதும் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை என பூங்கோதை எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார். ஆலங்குளம்  அருகே மாயமான்குறிச்சியில் நேற்று மினிபஸ் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 36 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் ஆலங்குளம், நெல்லையில் அரசு  மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வருகின்றனர்.  இதில் மாயமான்குறிச்சியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்  மகனும், 9ம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்புக்கு தேர்ச்சிபெற்றவருமான மகேந்திர குமார் (15) நெல்லை அரசு மருத்துவமனையில்  சிகிச்சை  பலனின்றி இறந்தார். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 14 பேர் சிகிச்சை பெற்று  வருகின்றனர். இவர்களை  பூங்கோதை எம்எல்ஏ பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.  மேலும் அவர்களுக்கு தேவையான  மருத்துவ உதவி அளிக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

பின்னர் அவர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘4 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தாத நிலையில் ஆலங்குளம் சாலையில் அடிக்கடி  விபத்து ஏற்படுகிறது. விபத்தில் சிக்கிய சிறுவன் மகேந்திரகுமாருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்திருந்தால் உயிரிழப்பை தவிர்த்து  இருக்கலாம். ஆலங்குளம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டபோதும் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை. எனவே, அங்கு தேவையான அளவுக்கு டாக்டர்கள், நர்சுகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.  ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலுக்காக 15 அமைச்சர்கள் தொகுதியில்  முகாமிட்டுள்ளபோதும் இந்த விபத்தில் சிக்கியவர்களை  சந்தித்து ஆறுதல்கூற ஒருவர் கூட வரவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும்  ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் மேம்படுத்தப்படும்’’ என்றார்.

Tags : Government hospital ,facilities ,
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்