×

பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம் ஒரு வாரமாக நெரிசலில் திணறும் நாகர்கோவில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் இல்லை

நாகர்கோவில், மே 9: பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் நகர பகுதிகள் ஒரு வார காலமாக நெரிசலில் திணறி வருகின்றன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். நாகர்கோவில், நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முதல்கட்டமாக 18 வார்டுகளில் முழுமையாகவும், 17 வார்டுகளில் பகுதியாகவும் தொடங்கப்பட்டது. 76 கோடியே 4 லட்சம் மதிப்பில் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம் 118 கிலோமீட்டர் நீளத்திற்கு பணிகளை முடிக்க வேண்டும்.  பாதாள சாக்கடை திட்ட பணிகளை 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் முடித்திருக்க வேண்டும். ஆனால் வழக்கு உள்ளிட்ட காரணங்களால் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. முறையாக திட்டமிடாததே இத்தகைய இழுத்தடிப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் நாகர்கோவில் நகர பகுதி மக்கள் மட்டுமின்றி நாகர்கோவிலுக்கு வருகின்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் நாகர்கோவில் நகரில் அவ்வை சண்முகம் சாலையில் நாகராஜா கோயில் திருப்பு பகுதியில் இருந்து மணியடிச்சான் கோயில் சந்திப்பு வரையிலான பகுதியில் பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  இதனால், இந்த சாலை மூடப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறை அறிவித்தபடி, அவ்வை சண்முகம் சாலையில் மீனாட்சிபுரம் வழியாக ஒழுகினசேரி வரை செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோட்டாறு காவல் நிலையம் முன்பு இருந்து இடதுபக்கம் திரும்புவதற்கு பதிலாக நேராக சென்று புனித சவேரியார் ஆலயம் சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, கலெக்டர் அலுவலகச் சந்திப்பு, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சந்திப்பு,  வடசேரி காசிவிஸ்வநாதர் கோயில் வழியாக செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் திணறி வருகின்றன. தற்போது கூடுதலாக அவ்வை சண்முகம் சாலையில் செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் கலெக்டர் அலுவலகத்தை சுற்றி வருவதால் பிற வாகனங்களும் சேர்ந்து கடுமையான போக்குவரத்து நெரிசல் நகர பகுதியில் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து மாற்றிவிடப்பட்டபோதிலும் அதனை ஒழுங்குபடுத்த காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாகனங்கள் அதிகம் நெரிசலுக்குள்ளாகின்ற சந்திப்பு பகுதிகளில் காவலர்கள் வாகனங்களை ஒழுங்குபடுத்த இல்லாததால் வாகனங்கள் கடும் நெரிசலில் சிக்குகின்றன. நேற்று திருமண விழாக்கள் நடைபெற்றதால் நாகர்கோவிலில் வருகை தந்த வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது போக்குவரத்து நெரிசலுக்கு மற்றொரு காரணமாக இருந்தது. மதிய வேளைகளில் நெரிசல் அதிகம் நடந்த எந்த பகுதியிலும் போக்குவரத்து போலீசார் வாகன போக்குவரத்தை சீர்செய்வதை காண முடியவில்லை என்று வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர். தற்போது போக்குவரத்து மாற்றிவிடப்பட்ட  பகுதியில் எந்தெந்த இடங்களில் அதிக அளவில் நெரிசல் ஏற்படுகிறது என்பதை  போலீசார் கண்காணித்து அதற்கு உரிய பரிகாரம் காண வேண்டும் என்பதும், அதற்கு  மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதும் வாகன ஓட்டிகளின் கோரிக்கை  ஆகும்.

Tags : Nagercoil ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...