×

கம்பம் முல்லையாற்றில் மனிதகழிவை கலந்ததா நகராட்சி?

கம்பம், மே 8: கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டி முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கம்பம் நகராட்சி கழிவுநீர் ஊர்தி மூலம் மனித கழிவுகள் கலக்கப்பட்டதாக சமூக வலை தளங்களில் செய்தி பரவியதால் பெரும் பரபரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நகராட்சி நிர்வாகம் இதை மறுத்துள்ளது.கம்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் செப்டிங் டேங்கில் உள்ள மனித கழிவுகளை நகராட்சி மற்றும் தனியார் நவீன கழிவு நீர் ஊர்தியில் சேகரித்து அகற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் கம்பம்நகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் ஊர்தியானது, கம்பம் சுருளிப்பட்டி முல்லைப்பெரியாறு தண்ணீரில் கழிவுகளை கலப்பது போல, சமூக வலைத் தளங்களில் சிலர் படத்துடன் பதிவேற்றம் செய்தனர். இதனால் கம்பம் பகுதியில் ஆற்று நீரில் மனிதகழிவுகள் கலக்கப்பட்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கம்பம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கடந்த ஒரு மாதமாக தீப்பற்றி எரிகிறது. தீயை கட்டுப்படுத்தும் பொருட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் நாள்தோறும் கழிவு நீர் ஊர்தியின் மூலம் முல்லைப்பெரியாறு ஆற்றில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து தீ அணைக்கப்படுகிறது. கழிவு நீர் ஊர்தி மூலம் முல்லைப்பெரியாறு ஆற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சுவதை படம் எடுத்து அதை சிலர் சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்து பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். முல்லைப் பெரியாற்றில் கழிவு நீர் கலக்கப்படவில்லை என்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், உரம் தயாரிப்பதாக ரூ.4.5 கோடிக்கு டென்டர் எடுத்தவர்கள் குப்பையை அகற்றாமல் தீவைத்து விடுகின்றனர். அதற்கு நகராட்சி வாகனங்களில் ஏன் தண்ணீர் எடுத்துச்செல்ல வேண்டும் என்றனர்.

Tags : humanity ,Pallam Mullaiyar ,
× RELATED தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்...