×

ஆண்டிபட்டியில் விலை நிலங்களாக மாறி வரும் விளைநிலங்கள்

ஆண்டிபட்டி, மே 8: ஆண்டிபட்டி பகுதியில் விளைநிலங்கள் வேகமாக பிளாட்டுகளாக மாறி வருகின்றன. இதனால் வரும் காலங்களில் இப்பகுதியில் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது.தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி தாலுகா விவசாயம் சார்ந்த பகுதியாகும். இப்பகுதியில் வருசநாடு மலை, வெள்ளி மலை, மேகமலை, சுருளிமலை, சதுரகிரி மலை, வேலப்பர் கோயில் மலை ஆகிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழைக்காலங்களில் பெய்யும் மழையின் மூலமாக 400க்கும் மேற்பட்ட ஊரணிகள், 200க்கும் மேற்பட்ட கண்மாய்கள், 150க்கும் மேற்பட்ட ஊரணிகளுக்கு ஓடைகள் மூலமாகவும் ஆறுகளின் மூலமாகவும் நீர் வரத்து ஏற்படும்.இதனால் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள ஏராளமான விவசாயிகள் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் கிணற்று பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வந்தனர். இதனால் இப்பகுதி விவசாயம் செழுமையாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலிருந்த மழை தரும் அடர்ந்த மரங்களை வெட்டியதால் மழை பொழிவு இல்லை. ஈரப்பதத்தை தக்கவைக்கும் வளம் மிக்க மண், மணல் போன்ற கனிம வளங்களை அள்ளியதால் நிலத்தடி நீர்மட்டம் அதால பாதாளத்திற்கு சென்று விட்டது.

இதனால் பல ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட தென்னந்தோப்புகள், வாழைத்தோப்புகள், கொய்யாதோப்புகள் மற்றும் வயல்வெளிகள் என ஏனைய விவசாய நிலங்கள் வறட்சியினால் அழிந்து பாலைவனமானது. இதனை சிலர் வீடுகள் கட்டும் பிளாட்டுகளாக மாற்றி வருவதால் விவசாயம் கேள்விக்குறியாவது மட்டுமின்றி வருங்கால சந்ததினருக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்பதை எண்ணி சமூக ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வறட்சியினால் விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாறி வருவது மனதிற்கு மிகவும் கஷ்டத்தை தருகிறது. மேலும் இனி வரும் சந்ததியினர் எவ்வாறு உணவுத் தட்டுப்பாடு இன்றி வாழ்வார்கள். எனவே விவசாய நிலங்களை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

Tags : Farms ,land ,Andipatti ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!