×

கோழிப்பண்ணை வளாகத்தில் புதிய ஆர்டிஓ அலுவலகம்

திருமங்கலம், மே 8: சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்ந்த அரசு கோழிப்பண்ணை வளாகத்தில் புதிய ஆர்டிஓ அலுவலகம் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். உசிலம்பட்டி வருவாய் கோடத்தினை இரண்டாக பிரித்து திருமங்கலத்தில் புதிய வருவாய் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய ஆர்டிஓ அலுவலகம் தற்போது திருமங்கலம் தாலூகா அலுவலகத்தில் ஒரு பகுதியில் இயங்கி வருகிறது. இதற்கான புதிய அலுவலகத்திற்கான இடத்தினை தேர்வு செய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். திருமங்கலம் மதுரை நான்கு வழிச்சாலையில் உச்சப்பட்டி ஊராட்சியில் பல ஏக்கர் பரப்பளவில் அரசு கோழிப்பண்ணை செயல்பட்டு வந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பண்ணை மூடப்பட்டது. ஆனால் இந்த இடம் காலியாக கிடந்தது. இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. கோழிப்பண்ணை வளாகத்தில் இருந்த ஜன்னல், கதவுகளை பெயர்த்து எடுத்து சென்று விற்று விட்டனர்.

இதனைத் தொடர்ந்து அரசு பழைய கோழிப்பண்ணை இடத்தை வருவாய் துறையிடம் ஒப்படைத்தது. அந்த இடத்தில் காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி கட்டப்பட்டது. மீதமுள்ள இடத்தில் விரைவில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட உள்ளது. இந்நிலையில் மீதமுள்ள இடத்தில் திருமங்கலத்தின் புதிய ஆர்டிஓ அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது திருமங்கலம் ஒன்றிய அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம் என அரசு துறை அலுவலகங்கள் இங்கு வந்து விட்டால் பழைய கோழிப்பண்ணை  இடம் முழுவதும் வருவாய்த் துறையின் கீழ் வந்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : RTO ,Poultry Campus ,
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு