×

அய்யம்பாளையத்தில் குடிநீர் திட்டத்திற்கு புதிய போர்வெல் அமைக்க மக்கள் எதிர்ப்புஅமைதி பேச்சுவார்த்தை தோல்வி

தா.பேட்டை. மே 8:  முசிறி அருகே அய்யம்பாளையத்தில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் துறையூர் பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக போர்வெல் அமைக்க பொதுமக்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்ததால் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் தோல்வியில் முடிந்தது. துறையூரில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் அடிக்கடி சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்னையை தீர்க்கும் விதமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் முசிறி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் காவிரி ஆற்றில் ராட்சத போர்வெல் அமைத்து அதன் மூலம் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த அய்யம்பாளையம் பகுதி மக்கள் போர்வெல் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து முசிறி ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ ரவிச்சந்திரன் தலைமையில், டிஎஸ்பி தமிழ்மாறன் மற்றும் குடிநீர் வடிகால்வாரிய அலுவலர்கள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

 பேச்சுவார்த்தையின்போது அய்யம்பாளையம் பகுதியில் உள்ள காவிரிஆற்றில் ஏற்கனவே கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் போர்வெல்கள் அமைக்கப்பட்டு பல இடங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக போர்வெல் அமைப்பதால் அய்யம்பாளையம் பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் போர்வெல் அமைக்ககூடாது என பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்களின் எதிர்ப்பு குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் முடித்து வைக்கப்பட்டது.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு