×

பெயரளவில் செயல்பட்டு வரும் துறையூர் அரசு மருத்துவமனை


டாக்டர்கள் பற்றாக்குறை

 மருத்துவ கருவிகள் இல்லை

 சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் கடும் அவதி

துறையூர், மே 8:  துறையூரிலுள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையாலும், போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமலும், சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இம்மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. துறையூரில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இம்மருத்துவமனை 180க்கும் மேற்பட்ட கிராமத்திற்கும் தலைமை மருத்துவமனையாக இருந்து வருகிறது. இந்த அரசு மருத்துவமனையை 1970ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். அப்போது கட்டப்பட்ட கட்டிடம் அப்படியே உள்ளது. அதற்கு பிறகு எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையம் போல் செயல்பட்டு வருகிறது.
 பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் போதிய டாக்டர்கள் இல்லாமல் இம்மருத்துவமனைக்கு வருபவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். விடுமுறை நாட்களில் டாக்டர்கள் பெரும்பாலும்  வருவதில்லை. அந்நேரத்தில் பிரசவம் பார்ப்பதற்க்கு டாக்டர் இல்லாமல் தனியார் மருத்துவமனையை நாடவேண்டியசூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் கொடி சுற்றிப்பிறக்கும் குழந்தைக்கு இங்கு பிரசவம் பார்ப்பது கடினம் எனக்கூறி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

 இங்கிருந்து திருச்சிக்கு ஆம்புலன்ஸ்சில் அழைத்து சென்றால் 1 மணி நேரத்திற்கு மேல் காலதாமதமாகிறது. இதனால் தாய்க்கோ, இல்லை பிறக்கும் குழந்தைக்கோ ஏதோ பிரச்னை எற்பட்டால் டாக்டர்கள் கை விரித்துவிடுவார்கள். எனவே உடனடியாக  பிரசவம் பார்ப்பதற்கு என்றே தனியாக பெண் டாக்டர் ஒருவரை நியமிக்க வேண்டும்.  துறையூர் பகுதியில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 6 சாலை விபத்துகளாவது ஏற்படுகின்றன. இதில் கை, கால் எலும்புகள் முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தால் உடனடியாக மேல் சிகிச்சைக்கு அனுப்பி விடுகின்றனர். இதில் எழை எளியவர்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். இதில் ஓரளவு வசதியுடையவர்கள் தாங்கள் தொடர்பு வைத்துள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிடுகின்றனர். எலும்பு முறிவுக்கு என்று 2 டாக்டர்கள் இருக்கும்போது, இந்த எலும்பு முறிவுக்கு தனிப்பிரிவு கட்டிடம் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

அரசு மருத்துவமனையில் செயல்படாத மருத்துவம் என்று நுழைவாயில் பகுதியில் பதாகையை மருத்துவமனை நிர்வாகம் வைத்துள்ளது. நரம்பியல் மருத்துவ பிரிவு, இருதய சிகிச்சை பிரிவு, நுரையீரல் சிகிச்சை பிரிவு, சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு உட்பட 11 நோய்களுக்கு மருத்துவம் பார்க்கப்படாது என்பது போல் பதாகை வைத்திருப்பதால் புறநோயாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள கலாச்சாரத்தில் குழந்தைகள் பாஸ்புட் உணவை உண்ணுகின்றனர். பாஸ்புட்டில் பயன்படுத்தப்படும் எண்ணெய்யால் மற்றும் கொழுப்பினால் குழந்தைகளுக்கு சிறுவயதிலே இருதய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இருதய நோய் இருப்பது தெரியாமல் பல குழந்தைகள் இறந்துவிடுகின்றன. குழந்தைகள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்க  தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் துறையூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி இருதய சிகிச்சை, எலும்பு முறிவு, மகப்பேறு என புதிதாக கட்டிடம் அமைத்து அதற்கான கருவிகள் மற்றும் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.


Tags : Duraiyur Government Hospital ,
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...