×

பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வரும் பிரச்னை திருவாரூரில் ஆர்டிஓ பங்கேற்ற பேச்சுவார்த்தையில் இழுபறி

திருவாரூர், மே 8: திருவாரூரில் அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வது தொடர்பாக ஆர்டிஓ முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.  திருவாரூர் நகரில் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று கடந்த திமுக ஆட்சி காலத்தின் போது 2010ம் ஆண்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக திருவாரூர் நகராட்சி 30வது வார்டுக்குட்பட்ட தியாகபெருமாநல்லூர் பகுதியில் 18 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு பேருந்து நிலையம் அமைப்பதற்காக ரூ.6 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் 2011ல் ஆட்சி மாற்றம் காரணமாக பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டன. பின்னர் பணிகள் துவங்கப்பட்டு சுமார் 7 ஆண்டுகள் வரையில் நடைப்பெற்ற போதிலும் நிதி பற்றாக்குறை காரணமாக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டு ரூ13 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள  இந்த புதிய  பேருந்து நிலையம் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூலம் வீடியோ கான்பரன்சிங் முறையில்  திறந்து வைக்கப்பட்டது.

தற்போது இந்த பேருந்து நிலையம்  திறக்கப்பட்ட பின்னரும் பயணிகளுக்கு பலனில்லாமல் இருந்து வருகிறது. காரணம் திருவாரூரிலிருந்து நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்குள் வராமல் வழியில் பைபாஸ் ரோடு ரயில்வே மேம்பாலம் அருகிலேயே பயணிகளை இறக்கி விடுவதும்,  திருச்சி, தஞ்சை, மதுரை மற்றும் கும்பகோணம், மன்னார்குடி  போன்ற வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு வந்ததாலும்  புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு பேருந்துகள் இல்லாமல் பயணிகள் அவதிப்படும் நிலை இருந்து வருகிறது.  இதனையடுத்து அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல கோரி கடந்த 3ம் தேதி ரயில்வே மேம்பாலம் அருகே வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நேற்றுமுன்தினம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ முருகதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் சங்கரன், அரசு போக்குவரத்து கழக வணிக மேலாளர் ராஜா, வர்த்தகர் சங்க தலைவர் பாலமுருகன் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பழைய பேருந்து நிலையம் வந்து செல்வதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் ஒப்பு கொண்ட நிலையில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து தான் பேருந்துகள் புறப்பட வேண்டும் என அரசு போக்குவரத்து கழகம் மற்றும் நகராட்சி சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் இது குறித்து எவ்வித உடன்பாடும் ஏற்படாமல் கூட்டம் முடிவடைந்தது

Tags : bus stand ,Tiruvarur ,RTO ,
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி