×

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு இறந்த நிலையில் பிறந்த குழந்தை உறவினர்கள் முற்றுகை முயற்சி, பரபரப்பு

மன்னார்குடி, மே 8: மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப் பட்டிருந்த பெண்ணிற்கு  இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததால்  ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் தேவங்குடி காவல் சரகத்திற்குட்பட்ட கட்டையடி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் (28). இவர் கேட்டரிங் படிப்பு முடித்து விட்டு பொதக்குடியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் நிஷாந்தி  (20) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.  இந்நிலையில் நிஷாந்தி கர்ப்பம் அடைந்ததால் அவரை கணவர்  மகேஷ் மற்றும் உறவினர்கள் தலை பிரசவத்திற்காக மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 3 நாட்களுக்கு  முன்பு சேர்த்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிஷாந்தினிக்கு நேற்று முன் தினம் காலை கடுமையான வலி வந்ததாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து அவரின் கணவர் மகேஷ் மற்றும் உறவினர்கள் கர்ப்பிணி நிஷாந்தினிக்கு அறுவை சிகிச்சை செய்யுமாறு பணியில் இருந்த மருத்துவரிடம் கூறிய போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் சுக பிரசவம் ஆகும் என மருத்துவர் கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் நிஷாந்தினிக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அதில் இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ் மற்றும் அவரின் உறவினர்கள் மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டதற்கு அவர்கள் அளித்த பதில் திருப்தியளிக்கவில்லை என்றும், சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டப்பட்டதால் தான் குழந்தை இறந்த நிலை யில் பிறந்ததாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் நேற்று காலை மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த நிஷாந்தினி கணவர் மகேஷ் மற்றும் அவரின் உறவினர்கள் நிஷாந்தினிக்கு  மருத்துவர்கள் பிரசவம் பார்க்காமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் தான் குழந்தை இறந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட முயற்சித்தனர். இதுகுறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த மன்னார்குடி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் முனிசேகர், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் விஜயகுமார், டாக்டர் பரிமளா பிரபாகரன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து மகேஷ் உறவினர்கள் கூறுகையில், கருவில் இருக்கும் போது மேற்கொண்ட சோதனையில் குழந்தை நன்றாக ஆரோக்கியமாக இருந்தது. எனவே  பிரசவத்தின் போது இறந்த நிலையில் குழந்தை பிறந்ததற்கு சிகிச்சையில்  அலட்சியமாக இருந்த மருத்துவர்  மற்றும் இரண்டு செவிலியர்கள் தான் காரணம். எனவே அவர்களை  பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறினர். அதனை தொடர்ந்து நிஷாந்தினி கணவர் மகேஷ் சம்பவம் குறித்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவ கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். பின்னர் புகாரின் நகலை  மன்னார்குடி காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.  அதன் பேரில்  விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Mannarkudi ,state hospital ,siege ,child relatives ,
× RELATED பங்குனி பிரமோற்சவ விழா; மன்னார்குடி...