×

வாசுதேவநல்லூர் அருகே நாரணபுரம் கோயிலில் பூக்குழி திருவிழா

சிவகிரி, மே 8: வாசுதேவநல்லூர் சுற்றுவட்டாரத்தில் பிரசித்திப் பெற்ற தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட நாரணபுரம் ராஜராஜேஸ்வரி வடகாசியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பூக்குழி திருவிழா, சித்திரை மாதம் 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான திருவிழா, கடந்த 28ம் தேதி நாட்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு விபூதி, குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், பன்னீர், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு போன்ற 18 வகை நறுமணப் பொருட்களால்  அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடந்தது. இரவில் கோயில் முன்பு கும்மிப்பாட்டு, வில்லுப்பாட்டு போன்ற கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

9ம் திருநாளான நேற்று முன்தினம் விரதமிருந்து வரும் பக்தர்கள், வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோயிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. நேற்று முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை 3 மணிக்கு பல்வேறு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. 5.30 மணிக்கு கோயில் முன்புள்ள திடலில் அக்னி வளர்க்கப்பட்டது.

இதையடுத்து விரதமிருந்து வரும் பக்தர்களுக்கு கோயிலில் காப்புக்கட்டும் வைபவமும், மாலை 3 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சப்பர வீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து அக்னி குண்டத்தில் பசு மாடு இறங்கியதையடுத்து விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கினர். திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். வாசுதேவநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று பொங்கலிடுதல், முளைப்பாரி கரைத்தல், மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags : Pookkalai ,festival ,temple ,Vasudevanallur ,
× RELATED திருத்தணி அருகே திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா