×

சங்கரன்கோவில் 1வது வார்டில் கழிப்பிட வசதி கோரி நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

சங்கரன்கோவில், மே 8: சங்கரன்கோவில் நகராட்சி 1வது வார்டுக்குட்பட்ட பகுதிகள் திருவள்ளுவர் நகர், திருவுடையான் சாலை, சபாபதி நகர். இங்கு 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக வன்னிமடம் அருகே நகராட்சி சார்பில் கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் இல்லை எனக்கூறி இந்த கழிப்பிடம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கழிப்பிடத்திற்கு, நகராட்சி சார்பில் தண்ணீர் வசதி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமென மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் திடீரென கழிப்பிடத்தை இடித்து அப்புறப்படுத்தி கட்டிடம் கட்டியது.

இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை. கழிப்பிடம் இடிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள், சுற்றுப்பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் நேற்று அப்பகுதி பொதுமக்கள், கழிப்பிட வசதி செய்து தரக்கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் நகராட்சி அலுவலர்களிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

மக்கள் பயன்பாட்டில் இருந்த கழிப்பிடத்தை இடித்துவிட்டு நகராட்சி நிர்வாகம் புதிதாக கட்டிடம் கட்டுவதை ஏற்க முடியாது. கழிப்பிட வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் திறந்தவெளிகளை கழிப்பிடங்களாக பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் பகுதியில் புதிய கழிப்பிடம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விருது வாங்கிய நகராட்சியாக சங்கரன்கோவில் இருந்தும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக சுகாதார வளாகங்கள் கட்டுவதை விட்டுவிட்டு ஏற்கனவே இருந்த சுகாதார வளாகங்களை இடிப்பது மீண்டும் பொதுமக்களை திறந்தவெளி பயன்பாட்டிற்கு கொண்டு செல்லுமென சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

வீணடிக்கப்படும் மக்கள் வரிப்பணம் 1வது வார்டில் இடிக்கப்பட்ட கழிப்பிடம், வாம்பே திட்டத்தில் 2004-05ம் ஆண்டு ரூ.4 லட்சத்தில் கட்டப்பட்டது. 2013 -14ம் ஆண்டு பொதுநிதி ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து வறட்சி காரணமாக மூடப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. தண்ணீர் பிரச்னைக்காக மூடப்பட்ட கழிப்பிடம், திடீரென இடிக்கப்பட்டு கட்டிடமாக மாறியுள்ளதால் கழிப்பிடம் கட்டுவதற்கு, பராமரிப்பதற்கு செலவழித்த ரூ.6.50 லட்சம் வீணடிக்கப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

கடைகள் கட்டுவதில் திடீர் ஆர்வம்

சங்கரன்கோவில் பஸ் நிலையத்தின் உள்ளே தென்காசி பஸ்கள் நிற்கும் பகுதி, திருவேங்கடம் சாலை ஊரணி அருகே, கழுகுமலை சாலையில் பொதுமக்கள் நடைபாதையாக பயன்படுத்திய இடம் மற்றும் 1வது வார்டில் தற்போது கழிப்பிடத்தை இடித்து புதிய கட்டிடம் என கடைகள் கட்டுவதில் நகராட்சி ஆர்வம் செலுத்துவது ஏன்? என தெரியவில்லை என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags : Women ,office ,toilet facility ,Sankaranko 1st Ward ,
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ