×

விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யகோரி நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, மே 8: விவசாயிகள் விற்பனை செய்கிற நெல்லுக்கு உடனுக்குடன் பணம் பரிமாற்றம் செய்ய வலியுறுத்தி தஞ்சையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஏஐடியூசி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மின்னணு பண பரிமாற்றத்தை விரைவுப்படுத்தி விவசாயிகள் விற்பனை செய்கின்ற நெல்லுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்ய வலியுறுத்தி தஞ்சையில் உள்ள மண்டல  அலுவலகம் முன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஏஐடியூசி தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் சந்திரகுமார், சுமை சங்க மாநில தலைவர் சாமிக்கண்ணு, மாநில பொருளாளர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் உரிய முன்னேற்பாடு செய்து கொள்முதலில் விவசாயிகளுக்கு ஏற்படுகிற இடர்பாடுகளை போக்க வேண்டும். மின்னணு பண பரிமாற்றத்தை விரைவுப்படுத்தி விவசாயிகள் விற்பனை செய்கிற நெல்லுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களிலிருந்து நிர்வாகம் உடனுக்குடன் இயக்கம் செய்யாததால் ஏற்படுகிற எடை இழைப்பை நியாயமற்ற முறையில் கொள்முதல் பணியாளர்கள் மீது சுமத்துவதை கைவிட வேண்டும்.  கொள்முதல் பணியாளர்களிடம் இழப்பு தொகை வசூல் செய்வதை கைவிட வேண்டும். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலிருந்தும் இருப்பு இழப்பு முன்மொழிவு பெற்று பரிசீலனை செய்து இருப்பு இழப்பு அனுமதிக்க வேண்டும். நிரந்தரப்படுத்தப்பட்டுள்ள கொள்முதல் பணியாளர்களுக்கு இழப்பு தொகையை காரணம் காட்டாமல் நிபந்தனையின்றி நிரந்தர பணியில் சேர அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.  ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், அரசு போக்குவரத்துக்கழக குடந்தை கோட்ட பொது செயலாளர் மதிவாணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.


Tags :
× RELATED கலெக்டர் அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் துவக்கம்