வழிபாட்டு தலங்களில் அன்னதானம் வழங்க அனுமதி கட்டாயம்

நாமக்கல், மே 8:  நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ரமேஷ்குமார் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் கட்டாயம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஓட்டல், திருமண மண்டபங்கள், டீ கடை, ஜூஸ் கடை, தனியார் பள்ளி, கல்லூரி கேன்டீன்கள், விடுதிகள் என பெரும்பாலானவர்கள் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் அனுமதி பெற்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசின் 1,605 அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகளில் உள்ள 985 சத்துணவு மையங்கள், ஆஞ்சநேயர் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 17 அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள், உணவு பாதுகாப்பு துறையில் அனுமதி பெற்றுள்ளன. மேலும் சிலர் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

அதேபோல், மாவட்டத்தில் உள்ள இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் சாதாரண நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் அன்னதானம் வழங்க, கட்டாயம் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்று அன்னதானம் வழங்கும் போது, பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட குடிநீர் வழங்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், சுத்தமான, சுகாதாரமான இடத்தில் வைத்து பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கொண்டு சமைப்பதுடன், சுகாதாரமான இடத்தில் வைத்து விநியோகிக்கவும் வேண்டும்.

சமையல் பாத்திரங்கள் ஈயம் பூசியதாகவும், நன்கு சுத்தம் செய்யப்பட்டும் இருத்தல் வேண்டும். உணவு வகைகளை மூடி வைத்து, பாதுகாப்பாக பரிமாற வேண்டும். சமையல் செய்பவர்கள், உணவு பொருட்களை பரிமாறி கையாள்பவர்கள் தொற்று நோய் அற்றவர்களாக இருத்தல் வேண்டும். அன்னதானம் செய்பவர்கள், பேக் செய்யப்பட்ட உணவுகள், குடிநீர், குளிர்பானம் ஆகியவற்றில் காலாவதி தேதியை கவனித்து வழங்க வேண்டும்.

உணவு வணிகர்கள் காலாவதியான கலப்படம் செய்யப்பட்ட, தரம் குறைந்த பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களை தெரிந்தோ, தெரியாமலோ விற்பனை செய்யக்கூடாது.  அந்தந்த வழிபாட்டு தலங்களை நிர்வகிப்பவர்கள், உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து கட்டணம் செலுத்து உரிமம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விபரங்களை அறிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தை நேரில் அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : worship places ,
× RELATED புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு!