×

அதிமுக பிரமுகர் மீது பாலியல் ஆதாரம் வெளியிட்ட வக்கீலை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

பெரம்பலூர், மே 8: அதிமுக பிரமுகர் மீது பாலியல் ஆதாரம் வெளியிட்ட வக்கீலை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவை பெரம்பலூர் கோர்ட் தள்ளுபடி செய்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பல பெண்களை வரவழைத்து தங்களின் காம இச்சைக்கு இணங்க வைத்து அதை வீடியோ எடுத்து வைத்து தொல்லை கொடுத்து வந்ததாக ஆளுங்கட்சி பிரமுகர் உள்ளிட்ட சிலர் மீது எஸ்பியிடம் வக்கீல் அருள் கடந்த 21ம் தேதி புகார் செய்தார். இதையடுத்து கடந்த 25ம் தேதி தன்னிடம் பாதிக்கப்பட்ட பெண் பேசியதாக ஒரு ஆடியோவை வெளியிட்டார்.

இதைதொடர்ந்து வக்கீல் காமராசு பெரம்பலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வக்கீல் அருளை கடந்த 30ம் தேதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அதோடு வக்கீல் அருளின் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த கல்லம்புதூரை சேர்ந்த கலையரசியை (25) கைது செய்தனர். இந்நிலையில் கலையரசியை கைது செய்த வழக்கில் அருளை முக்கிய குற்றவாளியாக சேர்த்து 5ம் தேதி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்தனர், இதனிடையே பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசன் சங்கத்தினர், 5ம் தேதியே ஆடியோ வெளியிட்டது தொடர்பான 2வது வழக்கில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். அதேநேரம் போலீஸ் தரப்பில் அருளை 2 நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்து இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தரப்பில் கஸ்டடி கோரப்பட்டிருந்த மனுவை தள்ளுபடி செய்து கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

Tags : sexual assault ,attorney ,AIADMK ,
× RELATED சிதம்பரம் கோவிலில் பொது தீட்சிதர்கள்...