×

விளையாட்டு விடுதிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பம் வரவேற்பு

கிருஷ்ணகிரி, மே 8:  கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 5 முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

அதன்படி, மாணவர்களுக்கான விடுதி சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், மாணவிகளுக்கான விடுதி சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இங்கு மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ், நீச்சல் ஆகிய விளையாட்டுகளிலும், மாணவிகளுக்கு தடகளம், இறகுப்பந்து, மேசைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய விளையாட்டுகளிலும் பயிற்சி அளிக்கப்படும்.

இந்த விடுதிகளில் காலியாக உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளாக விளங்குவதற்கு 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான தேர்வு வரும் 21ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர் 2019-20ம் ஆண்டு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவம் www.sdat.tn.gov.in எனும் இணைய தளத்தில் கிடைக்கும். ஆன்லைன் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் 20ம் தேதி மாலை 5 மணி ஆகும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : sports pubs ,
× RELATED விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து படிக்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு