×

குளித்தலை பகுதியில் நுண்ணீர் பாசனம் நபார்டு திட்டப்பணிகள் ஆய்வு

குளித்தலை, மே 8: தமிழகத்தில்  விவசாய உற்பத்திக்கு தேவையான நீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதே நேரத்தில்  மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு உற்பத்தியினை அதிகரிக்கவேண்டிய சூழ்நிலை நிலவி வருகின்றது.  இருப்பில் உள்ள நீர்ஆதாரங்களை திறம்பட பயன்படுத்தி உற்பத்தியினை அதிகரிக்க  தமிழக  அரசின் மூலம் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனத்திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் சொட்டுநீர்பாசனம், தெளிப்பு நீர்பாசனம் மற்றும் மழைத்தூவான் பாசன முறைகளுக்கு தேவையான உபகரணங்கள் சிறு குறு விவசாயிகளுக்கு  100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும்  வழங்கப்பட்டு வருகின்றது. கரூர் மாவட்டத்தில் குளித்தலை தாலுகா  ரணியமங்கலம் கிராமத்தில் விவசாயி ஒருவர் வயலில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கூடுதல் வேளாண்மை இயக்குநர் (பணிமேலாண்மை) விஜயராணி   ஆய்வு செய்தார். அப்போது நுண்ணீர்பாசனத்தின் முக்கியத்துவம் மற்றும் கருவிகள் பராமரிக்கும் முறைகள் குறித்து கூறினார்.


 மேலும் இனுங்கூர் அரசு விதைப்பண்ணையில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் 54.94 லட்சத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களான நில மேம்பாட்டு பணிகள், பண்ணை அலுவலக்கட்டிடம் கட்டுதல், நீர் கொண்டு செல்லும் குழாய்கள் அமைத்தல், மழைத்தூவான், தெளிப்பு நீர்ப்பாசனம், மற்றும் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்தல் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது கரூர் மாவட்டத்தில் விதை ஆதாரமாக செயல்படும் இனுங்கூர் அரசு விதைப்பண்ணையினை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆய்வின் போது, கரூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மாநில திட்டம் கந்தசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகானந்தம்,  வேளாண்மை துணை இயக்குனர்  மத்திய திட்டம்  (பொ) சிவானந்தம், செயற்பொறியாளர் ராஜ்குமார், குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) பொன்னுசாமி, பண்ணை மேலாளர் கவிதா மற்றும் வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல்துறை அலுவலர்கள்  உடனிருந்தனர்.

Tags : Inspection ,bathroom area ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...