×

அரவக்குறிச்சி பகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக துணை முதல்வர் ஓபிஎஸ் பிரசாரம்

கரூர், மே 8: அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவாக, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாறையூர், அரவக்குறிச்சி, ஈசநத்தம், பள்ளப்பட்டி ஷா நகர், சின்னதாராபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 5மணி முதல் 9மணி வரை வாக்குகள் சேகரித்து பேசினார். அரவக்குறிச்சியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து துணைமுதல்வர் ஓபிஎஸ் பேசுகையில்,மத்திய, மாநில அரசுகளின் நல்ல திட்டங்களை உங்களுககு கொண்டு வந்து செந்தில்நாதன் சேர்ப்பார். தமிழக மக்களுக்கு உணவு பாதுகாப்பினை வழங்கியவர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு கான்கீரிட் வீடுகள் கட்டித் தரப்படும் எனச் சொல்லி இதுநாள் வரை 6லட்சம் பயனாளிகளுக்கு கட்டி தரப்பட்டுள்ளது.திருமண உதவித்திட்டம், 20 கிலோ அரிசி, மகப்பேறு நிதியுதவி திட்டம், பெண்களுக்கு ஸ்கூட்டி போன்ற பல்வேறு நலத்திட்டங்களை பார்த்து பார்த்து ஜெயலலிதா செய்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் விவசாயம்.

அதனை காக்கும் வகையில் நாங்கள் செயல்பட்டுள்ளோம். சட்டப் போராட்டங்கள் நடத்தி, காவிரி பிரச்னையை தீர்த்தவர் ஜெயலலிதா.சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக அரசு விளங்கி வருகிறது. இந்த தொகுதிக்குட்பட்ட 50 ஊராட்சிகளில் ரூ. 220கோடியில் விரைவில் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.வாக்காளர்களாகிய நீங்கள்தான் நீதிபதிகள். நல்ல தீர்ப்பு வழங்க கூடிய இடத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள். எனவே, நல்ல தீர்ப்பினை வழங்குங்கள் என்றார். நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட அனைத்து அதிமுக  நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags : Vice-chief OBS ,campaign ,AIADMK ,area ,Aravakurichi ,candidate ,
× RELATED புதிய கல்விக் கொள்கை குறித்து...