×

ஆரணியில் ஆலோசனை கூட்டம் மின்மோட்டாரில் குடிநீர் உறிஞ்சினால் குழாய் இணைப்பு துண்டிப்பு

ஆரணி, மே 8: ஆரணியில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் வீட்டில் மின்மோட்டார் அமைத்து குடிநீர் உறிஞ்சினால் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி எச்சரிக்கை விடுத்தார். ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், மினி டேங்குகள், கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பருவமழை பொய்த்துபோனதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் அனைத்து ஊராட்சிகளிலும் கடந்த சில மாதங்களாக நாளுக்கு நாள் குடிநீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் பிடிஓவிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். குடிநீர் பிரச்னையை தீர்க்க அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பிடிஓ தலைமையில் ஊராட்சி செயலாளர்ளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் தெரிவித்து இருந்தார்.

அதன்படி, நேற்று ஆரணி பிடிஓ அலுவலகத்தில் குடிநீர் பிரச்னைகளை சரிசெய்ய என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் பிடிஓ அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிடிஓ குப்புசாமி தலைமை தாங்கினார். இதில் அனைத்து ஊராட்சிகளில் இருந்து ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது பிடிஓ குப்புசாமி பேசியதாவது: கடந்த சில மாதங்களாக அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. இதை சரிசெய்ய டேங்க் ஆபரேட்டர்கள் காலை, மாலை நேரங்களில் முறையாக மின்மோட்டார்களை இயக்கி ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் சேமித்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். அதேபோல் வீட்டில் மின்மோட்டர் அமைத்து குடிநீர் எடுப்பவர்களின் குழாய் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். மேலும், கிராமப்பகுதிகளில் குடிநீர் பிரச்னைகள் ஏற்பட்டால் ஊராட்சி செயலாளர்கள் உடனடியாக எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு டேங்க் ஆபரேட்டர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் கிராமப்பகுதிகளில் குடிநீர், தெருவிளக்குகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என ஊராட்சி செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Auxiliary Meeting ,
× RELATED சிவகங்கையில் கைதானவர் வீட்டில் 10...