×

அனகாபுத்தூர் நகராட்சி குளத்தில் கழிவுநீர் விடப்படுவதால் செத்து மிதக்கும் மீன்கள்

பல்லாவரம், மே 8: அனகாபுத்தூர் நகராட்சி குளத்தில் குப்பைகள், கழிவுநீர் கலப்பதால் மீன்கள் செத்து மிதக்கின்றன. அனகாபுத்தூர் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் பூங்கா அமைந்துள்ளது. காலை, மாலை நேரங்களில் இந்த பகுதி மக்கள் பூங்காவில் நடைபயிற்சி, யோகாசனம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பூங்கா அருகே குளம் ஒன்று அமைந்துள்ளது. நகராட்சி நிர்வாகம் இதனை முறையாக தூர்வாரி பராமரிக்காததால் தூர்ந்து காணப்படுகிறது. மேலும், இந்த குளத்தின் அருகே நகராட்சி குப்பை கிடங்கு உள்ளதால், அங்கிருந்து காற்றில் குப்பைகள் பறந்து குளத்தில் விழுகிறது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் விடப்படுவதால் நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘அனகாபுத்தூர் பகுதிக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த குளத்தை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை. இதனால், தூர்ந்து மழைக்காலங்களில் சேமிக்க முடியாத நிலை உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால், குளம் வறண்டு குறைந்தளவு நீர் மட்டும் உள்ளது. இதனால், சுற்று பகுதி வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து திண்டாடி வருகிறோம். இந்நிலையில் குளத்தில் கழிவுநீர் விடப்படுவதாலும், குப்பை விழுவதால் நீர் மாசடைந்து குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த குளத்தை தூர்வாரி, முறையாக பராமரிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Anakaputhur ,
× RELATED கூடுதல் சாம்பார் கேட்டு தாக்குதல்: ஓட்டல் ஊழியர் பலி