×

திருவள்ளூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

திருவள்ளூர், மே.8: திருவள்ளூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. அரை மணி நேரமே பெய்த மழையில், ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. கோடை வெயிலின் உச்சபட்சமாக கருதப்படும் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. அனல் காற்றுடன் அக்னி வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதும், வெயிலின் கொடுமை மேலும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியால் மக்கள் தவித்து வந்தனர். இருப்பினும் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த 2 நாட்களாக ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி பகுதிகளில் அவ்வப்போது கோடை மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. திருவள்ளூரில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலை 3 மணியளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. பின்னர், சூறாவளி காற்றுடன் பலத்த ஆலங்கட்டி மழை பெய்தது. அரை மணி நேரம் சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால், திருவூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, அரண்வாயல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரண்வாயலில் 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாலையில் முறிந்து விழுந்தன. ஏராளமான மரங்களும் முறிந்து விழுந்தது.

இதனால், திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, சுமார் 10 கி.மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், வட்டாட்சியர் சீனிவாசன், திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் தலைமையிலான மாவட்ட போலீசார் விரைந்து சென்று, மரத்தின் கிளைகளை தனித்தனியாக வெட்டி முழுவதுமாக அகற்றினர். மேலும், பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் மின்கம்பங்களையும் அகற்றி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அரண்வாயல் பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த புடலங்காய், சுரைக்காய் போன்ற தோட்ட பயிர்களும் சேதமானது. மேலும், பழமாகும் நிலையில் இருந்த மாங்காய்கள் பெருமளவில் உதிர்ந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும், ஆலங்கட்டி மழையால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வாடிய பயிர்கள் பசுமையானது:ஆர்.கே.பேட்டையை சுற்றியுள்ள ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், ராகவநாயுடுகுப்பம், ஜனகராஜ்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலையிலிருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இதனையடுத்து மாலை 3 மணியளவில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. அதன்பிறகு தொடர்ந்து ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை, தெருக்களின் இரு புறங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பயிர்கள் நீர் இல்லாமல் வாடி இருந்தது. கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழையால் வாடியிருந்த பயிர்கள் பசுமையடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதே போல் புழுக்கத்தில் அவதிப்பட்டு வந்த மக்கள் இந்த மழையால் நிம்மதியடைந்தனர்.

Tags : windstorm ,Tiruvallur ,
× RELATED திருவள்ளூரில் புதிதாக இன்று 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி