×

திருத்தணி நகராட்சியில் போலி கட்டிட வரைபட அனுமதி கடிதம் தயாரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை

திருத்தணி, மே 8 : திருத்தணி நகராட்சியில் போலி கட்டிட வரைபட அனுமதி கடிதம் தயாரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருத்தணி முருகன் கோயில் அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிகள் கடந்த 1980ம் ஆண்டு 21 வார்டுகளாக பிரிக்கப்பட்டு பேரூராட்சியாக செயல்பட்டு வந்தது. இந்த வார்டுகளுக்கு தேவையான சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்தது.  இந்த 21 வார்டுகளின் பெரும்பாலான பகுதிகள் அரசின் நத்தம் புறம்போக்கு நிலங்களாக இருந்தன. இங்கு மக்கள்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப, அந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் நிறைந்த நகர்ப்புற பகுதிகளாக மாறிவிட்டன. இதையடுத்து கடந்த 2005ம் ஆண்டு திருத்தணி மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்நகராட்சியில் நகர ஊரமைப்பு துறை சார்பில் ஆதிசங்கரர் நகர், சேகர் வர்மா நகர், பிஎம்எஸ் நகர், சுப்பிரமணியபுரம், காந்தி நகர், மங்கள சேக்கிழார் நகர், முருகப்பா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மனைப் பிரிவுகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்துறை மூலம் அனுமதி அளிக்கப்பட்ட பகுதியில் பூங்கா, 24 அடி அகல சாலை, மக்கள் பயன்பாட்டுக்கு 10 சதவீத இடத்தை நகராட்சி பெயரில் பதிவு செய்யப்பட்டன.சம்பந்தப்பட்ட ஏரியாவில் வீட்டுமனை பிரிவுகளுக்கு லே-அவுட் உரிமையாளர்கள் உரிய கட்டணம் செலுத்தியதும் நகராட்சி ஒப்புதல் வழங்கும். பின்னர் அந்த வீட்டுமனை விற்பனை செய்யும்போது சம்பந்தப்பட்டவர்களிடம் லே-அவுட் உரிமையாளர்கள்  பணம் வசூலித்து கொள்வர்.

இந்த மனைகளை வாங்குபவர்கள் வீடு கட்டும்போது, நகராட்சி அலுவலரிடம் கட்டிட வரைபட அனுமதி பெற்று, அதன் மூலம் வங்கிகளில் கடனுதவி பெற்று வீடு கட்டுவர்.
இந்நிலையில், திருத்தணி நகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் அரசு தரிசு நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களை புரோக்கர்கள் வாங்கி, நகராட்சியின் போலி லே-அவுட் வரைபட அனுமதியை தயாரித்து, சுமார் 150க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மதிப்பில் தங்களது வீட்டுமனைகளை விற்றுள்ளனர்.இதையடுத்து அந்த இடங்களை வாங்கியவர்களுக்கு, கடந்த 10 ஆண்டுகளாக கட்டிட வரைபட அனுமதி கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இவர்களிடம் ஒருசில புரோக்கர்கள் லட்சக்கணக்கில் பணம் பெற்று, அவர்களுக்கு நகராட்சியின் போலி கட்டிட வரைபட அனுமதி கடிதத்தை வழங்கியுள்ளனர். இதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ. 5 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே,  போலி கட்டிட வரைபட அனுமதி கடிதம் தயாரித்தவர்கள் மீது மாவட்ட கலெக்டர், நகராட்சி மற்றும் வருவாய் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Tiruttani Municipal Corporation ,
× RELATED திருநின்றவூர் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை