×

தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி : அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டு

தாம்பரம், மே 8: தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை, என பொதுமக்கள் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளனர். தாம்பரம், ரங்கநாதபுரம், கஸ்தூரிபாய் நகர், பழைய ஸ்டேட் பாங்க் காலனி, அம்பாள் நகர், முல்லை நகர், கன்னடபாளையம், இரும்புலியூர், சானடோரியம், கிழக்கு தாம்பரம், கணபதிபுரம், எம்.இ.எஸ். சாலை, சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில்,  மேற்கண்ட பகுதிகளில் சமீப காலமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தினமும் குறைந்தது 8 முதல் 10 முறை மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது வெயில் காலம் என்பதால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் மாணவர்கள் அனைவரும் வீட்டில் தான் உள்ளனர். இந்நிலையில், தொடர் மின்வெட்டு காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

முன்னறிவிப்பு இல்லாத இந்த மின்வெட்டு குறித்து மேற்கண்ட பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தால், முறையான பதிலளிப்பதில்லை, என்று கூறப்படுகிறது. இரவு நேரத்தில் மின் தடை ஏற்படும்போது, மின்வாரிய அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொண்டால் தொடர்பு கிடைப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தினசரி பலமுறை மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் புழுக்கத்தில் அவதிப்பட்டு வருகின்றனர். ரங்கநாதபுரம் 3வது, 4வது தெருவில் குறைந்த மின் அழுத்த பிரச்னை உள்ளதால், இங்கு புதிதாக ஒரு டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும், என பலமுறை கடப்பேரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். தற்போது கோடை காலம் என்பதால் இதுபோன்ற தொடர் மின்வெட்டால் தவித்து வருகிறோம்.  மின்வெட்டு புகார் தெரிவிப்பதற்காக கடப்பேரி மின்வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டால் அவர்கள் தொடர்பை துண்டித்து விடுகின்றனர்.

உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்கள் அலட்சியமாக பேசுகின்றனர். குறைந்த மின்னழுத்தத்தால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களும் பழுதாகிறது. இது ஒருபுறம் இருக்க தொடர் மின்வெட்டு காரணமாக வீட்டில் உள்ள தண்ணீர் மோட்டாரை பயன்படுத்தமுடியாத சூழ்நிலை உள்ளது. கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள மதுரகவி தெரு, பரணி நெல்லையப்பர் தெரு, வடக்கு தெரு, பலராமன் தெரு, சர்மா தெரு, வி.வி.எஸ். ஐயர் தெரு, மகாலட்சுமி தெரு, செந்தமிழ் சேதுப்பிள்ளை தெரு உள்ளிட்ட பகுதிகளில் இரவில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், மக்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : circuit areas ,
× RELATED பள்ளிக்கரணை சுற்றுப் பகுதிகளில்...