×

புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றபோது பாலியல் தொல்லை கொடுத்த இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை : மகளிர் நீதிமன்றத்தில் மைனர் பெண் புகார்

சென்னை, மே 8: புகார் கொடுக்க  காவல் நிலையம் சென்றபோது மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் மைனல் பெண் புகார் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், புழல் அடுத்த சூரப்பட்டு, செந்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் கோமதி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி பரணிதரனிடம் அளித்த புகார்: எனது, அப்பா விவகாரத்து பெற்று விட்டார். அதனால் எனது தாயாரிடம் வளர்ந்து வந்தேன். இந்நிலையில், ஜெயகரன் வாசுதேவன் என்பவரை, 2வதாக எனது தாயார் திருமணம் செய்தார். இதையடுத்து, அம்பத்தூர் வெங்கடாபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை எனது தாயின் பணத்தில் ஜெயகரன் வாங்கினார். அந்த குடியிருப்பில் நாங்கள் ஒன்றாக வசித்தோம். இந்நிலையில், எனது தாய் இல்லாத நேரத்தில், பாலியல் ரீதியாக எனக்கு தொல்லை கொடுத்தார் ஜெயகரன் வாசுதேன். அப்போது, ‘’நீயும் உன் அம்மா போல அழகாக இருக்கிறாய்’’’’ என்று கூறி ஆபாச படங்களை காட்டியும் என்னை துன்புறுத்தினார்.

இந்நிலையில் ஜெயகரனுக்கு, சங்கீதா என்பவருடன் கள்ளத்தொடர்பு இருப்பத தெரியவந்தது. இதை எனது தாய் தட்டி கேட்டார். இதையடுத்து இருவருக்கும் நடந்த வாக்குவாதம் அதிகமானது. என்னையும், என் தாயையும் வீட்டை விட்டு வெளியே செல்லும்படி ஜெயகரன் கூறினார். அடிக்கடி இதுபோன்ற சம்பவம் நடந்தது. இந்நிலையில் ஒருநாள், நானும் எனது தாயும் வீட்டில் இருக்கும்போதே, ரவுடிகளுடன் வந்து, எனது தாயின் பணத்தில் வாங்கிய வீட்டின் பத்திரம், கார் ஆகியவற்றை எடுத்து கொண்டு ஜெயகரன் வாசுதேவன் முயன்றார். மேலும் என்னையும் எனது தாயையும் வீட்டை விட்டு வெளியே தள்ள முயற்சித்தார். இதையடுத்து, சூரப்பட்டில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்.கடந்த 24.11.2018 அன்று, எங்கள் வீட்டுக்கு வந்து, அம்பத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை, மாற்றி எழுதி தரும்படி ஜெயகரன் மிரட்டினார். இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தேன். புழல் போலீசார் வந்து, என்னையும், எனது தாயையும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் நட்ராஜ், விசாரணை எதுவும் நடத்தாமல், ‘’அம்பத்தூர் குடியிருப்பை ஜெயகரனுக்கு எழுதி கொடுத்து விடுங்கள். இல்லாவிட்டால், விபசார வழக்கு போட்டு விடுவேன்’’’’ என்று மிரட்டினார். மேலும் தனி அறையில் வைத்து என்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். எனது கையை பிடித்து இழுத்து. ‘’இது போலீஸ் ஸ்டேஷன், இங்கு யாரும் வர மாட்டார்கள்’’’’ என்று அடாவடியாக கூறினார். மேலும் எனக்கு ஒத்துபோனால், உன்னை மட்டும் விட்டு விடுகிறேன் என்று இரட்டை அர்த்தங்களில் ஆபாசமாக கூறினார். எனவே, தாயின் 2வது கணவர் மற்றும் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். இந்த புகார் மீது வரும் 10ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். தாயின் 2வது கணவர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது மைனர் பெண் பாலியல் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைனர் பெண் என்பதால் இருவர் மீதும் போக்சோ சட்டம் பாயும் என்று தெரிகிறது.

Tags : Minor ,court ,women ,inspector ,sexual assault ,
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...