×

நாகர்கோவிலில் லாட்ஜில் தங்கி இருந்து வட்டி தொழில் நடத்திய டி.எஸ்.பி. இலவச சட்ட உதவி மையத்தில் மீனவர் கதறல்

நாகர்கோவில், மே 8: குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் மரிய செல்வம் (56). மீனவர். இவர் இலவச சட்ட உதவி மையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது : நான் மீன்பிடி தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர், என்னிடம் வியாபாரத்துக்காக மீன் வாங்க வரும் வகையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பழக்கமானார். அவரது சகோதரியும் எனக்கு தெரியும். தொழில் ரீதியாக எங்களிடையே பணம், கொடுக்கல் வாங்கல் இருந்தது.  இருவருமே மாறி, மாறி பணம் கொடுத்து உதவி செய்து வந்தோம். இந்த நிலையில் கடந்த 2018ல் தொழில் ரீதியாக எனக்கு ரூ.3 லட்சம் தேவைப்பட்டது. இது தொடர்பாக அந்த பெண்ணிடம் கேட்ட போது ரூ.10 வட்டிக்கு, ரூ. 1 லட்சம் தருவதாக கூறினார். வெற்று பத்திரத்தில் கையொப்பம் போட்டு தந்தால் தான் பணம் தர முடியும் என தெரிவித்தார். நானும் சம்மதம் தெரிவித்ததன் பேரில் பணம் பெற்றுக் கொண்டேன். அந்த பணத்துக்கு 28.2.2019 வரை ரூ.94 ஆயிரம் கட்டி உள்ளேன். இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் டி.எஸ்.பி.யாக இருந்த ஒருவரை எனக்கு அந்த பெண் அறிமுகம் செய்து வைத்தார். அந்த டி.எஸ்.பி. நாகர்கோவில் செட்டிக்குளத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி, குமரி மாவட்டத்தில் பணியில் இருந்து வந்தார். இப்போது அவர் வெளி மாவட்டத்தில் பணியில் இருக்கிறார். அவர் மூலம் ரூ.2 லட்சம் கடனாக எனக்கு வாங்கி தந்தார். இதற்காக வெற்று பத்திரம், வங்கி காசோலை உள்ளிட்டவற்றை பெற்றுக் ெகாண்டார். இந்த கடன் தொகைக்கு வட்டியாக மாதம் ரூ.20 ஆயிரம் வீதம் கடந்த பிப்ரவரி மாதம் வரை ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கட்டி உள்ளேன்.

கடந்த மார்ச் மாதம் எனது தொழில் சரிவர நடைபெறாததால் என்னால் வட்டி கட்ட முடிய வில்லை. இதனால் அசல் தொகையை செலுத்தி விடுவதாகவும், வட்டியை குறைத்துக் ெகாள்ளுமாறும் கேட்டேன். ஆனால் இது பற்றி அவர்கள் கண்டு கொள்ள வில்லை. என்னை பற்றியும், எனது மனைவி மற்றும் குடும்ப பெண்களையும் அவதூறாக பேசி வட்டி மற்றும் அசலுடன் சேர்த்து ரூ.8 லட்சம் பாக்கி உள்ளது. இந்த பணத்தை தந்தால் தான் உன்னையும், உன் குடும்பத்தையும் வாழ விடுவோம் என மிரட்டினார்கள். போலீஸ் அதிகாரி அடிக்கடி என்னிடம் போனில் பேசி நான் ஒரு டி.எஸ்.பி. ஆவேன். எத்தனை பொய் கேஸ் வேண்டுமானாலும் போட முடியும் என மிரட்டினார். கடைசியாக கடந்த 29.4.2019, 30.4.2019 அன்று இரவு 10 மணியளவில் எனது செல்போனில் பேசி என்னை அச்சுறுத்தினார். சீருடை அணியாத  போலீசார் வந்து என்னையும், குடும்பத்தினரையும் மிரட்டுகிறார்கள். தற்போது குடும்பத்துடன் தற்கொலை செய்து ெகாள்ளும் எண்ணத்தில் உள்ளேன். நியாயமாக நான் ெகாடுத்த பணம் ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்தை கணக்கில் கொண்டு, மீதி பணத்தை அரசு வட்டியுடன் நீதிமன்றத்தில் உரிய கால அவகாசத்தில் செலுத்தி விடுவேன். எனவே அதுவரை எனக்கும், எனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு கிடைக்கும் வகையில் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவும், எனக்கு சட்ட உதவி வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறி உள்ளார். இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் தற்போது விசாரணை நடக்கிறது. மேலும் நீதிமன்றத்திலும் மரிய செல்வம் மனு தாக்கல் செய்ய உள்ளார். டி.எஸ்.பி.யே கந்துவட்டி கும்பல் அளவுக்கு மிரட்டியதாக கூறப்படும் புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : lodge ,Free Legal Help Center ,Nagercoil Fisherman Kural ,
× RELATED அருகில் புதிய கட்டிடம் கட்ட...