×

கன்னியாகுமரிக்கு 26 சுற்றுகள் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குகள் எண்ணிக்கை முடிவுகளை அறிந்து ெகாள்ள சிறப்பு வசதிகள்

நாகர்கோவில், மே 8:  கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிக வாக்குகள் பதிவாகி உள்ள கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வாக்குகள் 26 சுற்றுகளாக எண்ணப்படும் என அதிகாரிகள் கூறினர். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. தற்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. கன்னியாகுமரி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. வருகிற 23ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும். அதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைகள் திறக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவாகி உள்ள வாக்குகள் எண்ணப்படும். கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் என 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதில் அதிக வாக்குப்பதிவு சதவீதம் உள்ள கன்னியாகுமரி தொகுதியில் 26 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன குளச்சல் சட்டமன்ற தொகுதி வாக்குகள் 25 சுற்றுகளாகவும், நாகர்கோவில், பத்மநாபபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளன. விளவங்கோடு தொகுதி வாக்குகள் 23 சுற்றுகளாகவும், கிள்ளியூர் தொகுதி வாக்குகள் 21 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளன. 10 ேமஜைகள் வீதம் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரம் சீல் உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். ஒரு டேபிளுக்கு ஒரு மேற்பார்வையாளர் மற்றும் 2 பணியாளர்கள் வீதம் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவார்கள். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 128 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து  மாலை 6 மணிக்கு வெற்றி பெறும் வேட்பாளருக்கு சான்றிதழ் அளிக்கப்படும் என தெரிகிறது. ஏற்கனவே வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் விதம் மற்றும் ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் செயல்முறை விளக்க பயிற்சி முகாமும் நடந்துள்ளது. ஒவ்வொரு சுற்று முடிவுகளும் உடனுக்குடன் தேர்தல் ஆணைய வெப்சைட்டில் வெளியிடப்படும். தேர்தல் சிறப்பு பார்வையாளர் காஜல், மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே ஆகியோர் பார்வையிட்டு கையெழுத்திட்ட பின் இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

Tags : Kanyakumari ,assembly ,facilities ,
× RELATED கன்னியாகுமரி, விளவங்கோடு தேர்தல்கள்...