×

அதிகம் பயன்பாடு இல்லாத அய்யனார் கோயில் சாலையில் தேவையற்ற விரிவாக்கம்

ராஜபாளையம், மே 7: ராஜபாளையத்திலிருந்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் சாலையை அதிகப் பயன்பாடு இல்லாத நிலையில், தேவையில்லாமல் இருபுறமும் விரிவாக்கம் செய்து, அரசு நிதியை வீணாக்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ராஜபாளையத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அய்யனார் கோயில் உள்ளது. இப்பகுதியை சுற்றுலாத் தலமாக தமிழக அரசு அறிவிக்கும் என கூறப்பட்டது. ஆனால், இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில், அய்யனார் கோயிலுக்கு செல்லும் சாலையை ரூ.லட்சக்கணக்கில் செலவு செய்து இருபுறமும் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், அதிகப் பயன்பாடு இல்லாத இந்த சாலையை தேவையில்லாமல் விரிவாக்கம் செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், அரசுப் பணம் வீணானதாக கூறுகின்றனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘அய்யனார் கோயிலுக்கு செல்லும் சாலையை அதிகமாக யாரும் பயன்படுத்துவதில்லை.

இந்த சாலையில் இணைப்புச் சாலைகளும் கிடையாது. எதற்காக சாலையின் இருபுறமும் இருந்த மரங்களை வெட்டி சாலையை விரிவாக்கம் செய்தார்கள் என தெரியவில்லை. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில், வனத்துறை சார்பில் ஆற்றுப் பகுதிக்கோ அய்யனார் கோவிலுக்கு செல்ல முடியாத அளவில் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மழை காலங்களில்தான் அய்யனார்கோயில் பகுதிக்கு பொதுமக்கள் செல்கின்றனர். கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அய்யனார் கோயில் பகுதியில், பொதுமக்களிடம் வாகன கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பணமும் எங்கு போய்ச் சேருகிறது என தெரியவில்லை. ஆற்றுப்பகுதிக்கு செல்லும் பொதுமக்களிடமும் வனத்துறை சார்பில் ஒரு நபர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பாதுகாப்பற்ற சூழலில்தான் செல்கின்றனர். மேலும் ஆற்றுப் பகுதியிலிருந்து நகராட்சி குடிநீருக்காக வரக்கூடிய பகுதியில் பொதுமக்கள்  அசுத்தம் செய்து வருகின்றனர்.எனவே, அய்யனார் கோயில் பகுதியில், தமிழக அரசு முறையாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, பொதுமக்கள் சென்று  வர ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags : Ayyanar ,temple road ,
× RELATED உடையார்பாளையம் அருகே பழமையான பல்லவர் கால அய்யனார் சிலை கண்டெடுப்பு