×

கார்பைடு மாம்பழம் விற்றால் அட்டை ரத்து

கம்பம், மே 7: உழவர்சந்தையில் `கார்பைடு கல்’ மாம்பழம் விற்றால் விவசாயி விற்பனை அட்டை ரத்து செய்யப்படும் என கம்பம் உழவர்சந்தை நிர்வாக அதிகாரி சின்னவெளியப்பன் தெரிவித்துள்ளார். முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பழ வகையாகும். தற்போது மாம்பழ சீசனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. மாங்காய்களை விரைவாக பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சில வியாபாரிகள் `கால்சியம் கார்பைடு கல்’ வைத்து பழுக்க வைக்கின்றனர். `கார்பைடு கல்’ வைத்தால் 3 முதல் 6 மணி நேரத்தில் காய் பழுத்துவிடும். கம்பம் உழவர்சந்தையிலும் மாமபழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த நிலையில் உழவர்சந்தையில் வந்துள்ள மாம்பழங்கள் இயற்கையாக பழுத்ததா அல்லது `கார்பைடு கல்’ வைத்து பழுக்க வைக்கப்பட்டதா என கம்பம் உழவர்சந்தை நிர்வாக அதிகாரி சின்னவெளியப்பன் சோதனை செய்தார். உழவர் சந்தையில் ‘கார்பைடு கல்’ மாம்பழம் விற்றால் விற்பனை செய்த விவசாயியின் விற்பனை அட்டை ரத்து செய்யப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், `` இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் படி இது தடை செய்யப்பட்ட முறை. `கார்பைடு கல்’ மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை மக்கள் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். மாம்பழங்களின் மீது பெரிய அளவில் கறுப்பு புள்ளிகள் இருக்கும். மாம்பழங்களை தொட்டு பார்த்தால் சூடாக இருக்கும். தோல் மட்டும் பழுத்தது போல மஞ்சளாக இருக்கும். உள்ளே வெட்டி பார்த்தால் பழுத்திருக்காது, சுவையும் இருக்காது. இந்த மாம்பழத்தை சாப்பிட்டால் வயிற்று வலி உண்டாகும். தொடர்ந்து வாந்தி, மயக்கம், வயிற்றுப்புண் போன்றவை ஏற்படும். மேலும், வேதியியல் மாற்றங்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது’’ என்றார்.

Tags : Cancellation ,
× RELATED ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது...