×

கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவர் தேவை தும்மக்குண்டு மக்கள் கோரிக்கை

வருசநாடு, மே 7: வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சி உள்ளது, இந்த ஊராட்சியை சுற்றியும் 20க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இதனால் தும்மக்குண்டு கிராமத்தில் கால்நடை அரசு மருத்துவமனை உள்ளது.இங்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டும் பல ஆண்டுகளாக நிரந்தர மருத்துவர் இல்லாமல் தற்காலிக மருத்துவரைக் கொண்டு இயங்கி வருகிறது. அவ்வப்போது தற்காலிக மருத்துவர்கள் தும்மக்குண்டு கிராமத்திற்கு வருவதில்லை. இதனால் நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட கால கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கால்நடை மருத்துவமனைக்கு கால்நடைகளை அழைத்து வரும் பொதுமக்கள், மருத்துவர் இல்லாமல் ஏமாற்றத்துடன் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர்.


வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் கூடுதல் பொறுப்பாக தற்காலிக மருத்துவர்கள் வருகின்றனர். ஆனால், மற்ற நாட்களில் அவர்கள் வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தும்மக்குண்டு கிராமத்தை சேர்ந்த நமகோடி கூறுகையில், கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவர் இல்லாததால் கால்நடை வளர்ப்போர் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே, தேனி மாவட்ட கலெக்டர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து மலைக்கிராமத்தில் உள்ள மக்களின் நலனைக் கருதி நிரந்தர கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும். மேலும் கால்நடை மருத்துவமனைக்கு செல்லும் சாலைகள் மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனை சீர் செய்து தரவேண்டும் என்று கூறினார்.

Tags : doctor ,hospital ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...