×

வாட்டும் கத்திரி வெயிலில் காய்ந்த காப்புக்காடுகள் நீரின்றி புள்ளிமான்கள் தவிப்பு

காரைக்குடி, மே 7 : காரைக்குடி அருகே கானாடுகாத்தான், கல்லூர், சங்கரபதி, எஸ்.பி மங்கலம், பனங்குடி, கொரட்டி, மண்மலை மற்றும் கல்லல் அருகே மாவூலிஅம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள காப்புக்காடுகள், சமூக வனக்காடுகளில்  1000க்கும் மேற்பட்ட அரியவகை புள்ளிமான்கள் வசித்து வருகின்றன. வனப்பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக  இங்குள்ள மான்கள் தண்ணீருக்காக, வயல்வெளி மற்றும் தோட்டங்களுக்கு  உணவை தேடி வருவது வழக்கம். அவ்வாறு வரும் போது நாய்களால் துரத்தி கடிபட்டு காயமடைந்தும், தாவிச்செல்லும் போது கிணறுகளில் தவறி விழுந்து அடிபட்டும், சாலையை கடக்கும்  போது  வாகனங்களில் அடிபட்டு இறப்பது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக, தண்ணீரை தேடி காப்புக்காடுகளை விட்டு வெளியேறும் மான்கள் பெரும்பாலும் இறந்து விடுவது வாடிக்கையாகி உள்ளது. கடந்த ஆண்டுகளில் மட்டும் 10க்கும் மேற்பட்ட மான்கள் உயிர் இழந்துள்ளன. அக்னி வெயிலின் தாக்கத்தால் வெயின் உக்கிரம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட தற்போது அதிக அளவில் கோடை வெயில் உள்ளது. இதனால் மே மாதம் துவங்கியுள்ள கத்தரி வெயிலை எப்படி சமாளிப்பது என தெரியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.


மனிதர்களுக்கே இந்நிலையென்றால், வனப்பகுதிகளில் தண்ணீர் வசதியில்லாத சூழலில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மான்களின் நிலைமை மிகுந்த பரிதாபத்திற்கு உரியதாக உள்ளது.தண்ணீருக்காக இந்த கோடையில் வெளியே வரும் போது மேலும் பல மான்கள் பலியாகும் அபாயம் உள்ளது. இதனால் கோடைகாலத்தை கருத்தில் கொண்டு, மான்களுக்கு வனப்பகுதிகளில் அதிக அளவில் குடிநீர் தொட்டிகளை அமைக்க வேண்டும். அதனை முறையாக கண்காணித்து தினமும் தண்ணீர் நிரப்ப வேண்டும். அதோடு வனப்பகுதிகளில் உள்ள ஓடைகளில் தடுப்பணைகள் கட்டி தண்ணீர் தேவைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீருக்காக மான்கள் வயல்களுக்கோ, மனிதர்களின் வசிப்பிடங்களுக்கோ வருவதையும், அதனால் உண்டாகும் ஆபத்துகளில் அவைகள் பலியாவதை தடுக்க முடியாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து வ.சூரக்குடி பழனியப்பன் கூறுகையில்,`` வனப்பகுதிகளில் மான்களை  பாதுகாக்க வனத்துறையின் சார்பில் போதிய நடவடிக்கை இல்லை. இதனால் வாகன விபத்து மற்றும் நாய்கள் கடித்து இறந்துபோகும் சம்பவம் நடந்தது வருகிறது. மான்களை காப்பாற்ற முள்வேலி அமைக்க வேண்டும்.  காடுகளில் நீர்நிலைகளை அமைத்து அதனை பராமரிக்க வேண்டும்.  5000 ஹெக்டேருக்கு மேல் உள்ள வனப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டுமே தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைப்பது போல் வனப்பகுதிகளில் தற்காலிக தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பலாம்’’ என்று கூறினார்.

Tags :
× RELATED சிவகங்கை தொகுதியை மீண்டும் தக்க வைத்த காங்கிரஸ்