×

காரைக்குடியில் தனியாருக்கு சவால் விடும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி விண்ணப்பத்துக்கு குவிந்த கூட்டம்

காரைக்குடி, மே 7:  காரைக்குடியில் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியில் சேர்க்கை விண்ணப்ப படிவம் பெற அதிக அளவில் பொதுமக்கள் குவிந்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. காரைக்குடி டி.டி நகர் பகுதியில் ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1938ல் தொடக்கப்பள்ளியாக துவங்கப்பட்டது, பின்னர் கடந்த ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.சாதாரணமாக அரசு பள்ளிகளை மக்கள் புறக்கணித்து தனியார் பள்ளிகளை  நாடிச் செல்லும் நிலை உள்ளது.  இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் ஷீ, டை, பெல்ட், ஐடி கார்டு, பள்ளி எம்பளம் போட்ட பேட்ஜ் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவிகளை பொறுத்தவரை சல்வார் காமிக்ஸ், ஓவர்கோட், பள்ளி எம்பளம் போட்ட போட்ஜ் அணிய வேண்டும்.  தவிர பள்ளிக்கு 9 மணிக்கு கட்டாயம் வர வேண்டும், மதிய உணவு உண்ண டவல், ஸ்பூன் கொண்டு வர வேண்டும். பள்ளிக்கு வரும் போது நகம் வெட்டி தலையை சீவி, குளித்து சுத்தமாக வரவேண்டும். மாணவிகளை பொறுத்தவரை இரட்டை பின்னல் போடுதல் வேண்டும். தலையில் பூ வைக்கக் கூடாது என விதிமுறைகள் விதிக்கப்பட்டு ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்களை விட ஒருபடி மேலே சென்று இம் மாணவர்கள் அசத்தி வருகின்றனர்.


 இந்த தகவல் கொஞ்சம், கொஞ்சமாக வெளியே பரவியதின் பயனாக இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு பல்வேறு தனியார் பள்ளியில் படித்தவர்கள், ஆசிரியர்களின் குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் விண்ணப்பம் பெற வரிசையில் நின்று வாங்கினர்.
தனியார் பள்ளிகளின் மோகத்தில் மக்கள் இருக்கும் நிலையில் ஒரு அரசு பள்ளியில் சேர்க்கை விண்ணப்பம் பெற மக்கள் குவிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அத்துடன் அட்மிஷனுக்கு பரிந்துரை கடிதம் வாங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர்ராஜா கூறுகையில், இப் பள்ளியில் ஆட்டோ ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்கள் என மிகவும் அடித்தட்டு மக்களின் குழந்தைகள் அதிக அளவில் படிக்கின்றனர். மாணவர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. மாணவர்களுக்கு என பொது விதிமுறை வகுக்கப்பட்டு அதில் பெற்றோர்களிடம் கையொப்பம் வாங்கப்பட்டுள்ளது. இதனை மீறும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற பழக்க வழக்கங்களால் மாணவர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்படுள்ளது. படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. ஸ்மார்ட் கிளாஸ் துவங்கப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்க பேஸ்புக்கில் (facebook: ramanathanchettiar municipalhighs school) என்ற அக்கவுண்ட் துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான சேர்க்கை கடந்த ஜூன் மாதம் துவங்கப்பட்டது. இதுவரை 300க்கும் மேற்பட்டோர் விண்ணப்ப படிவம் வாங்கி சென்றுள்ளனர். ஆசிரியர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பாலேயே இந்த சாதனையை எட்ட முடிந்தது.  தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து அதிகஅளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று கூறினார்.

Tags : crowd ,Karaikudi ,
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க