×

சுற்றுச்சூழலை பாதிக்கும் இறால் பண்ணைகளை மூடவேண்டும்

ராமநாதபுரம், மே.7: திருவாடானை பகுதியில் அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். மனுவில், திருவாடானை தாலுகா வட்டாணம் ஊராட்சி தாமோதரன்பட்டிணம் கிராமம் மீனவர்கள் வாழும் பகுதியாக உள்ளது. குறிப்பிட்ட சிலரின் லாப நோக்கத்திற்காக கிராமமே அழியும் நிலை உள்ளது. அனுமதியின்றி இங்குள்ள இறால் பண்ணைகளால் நீராதாரம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு தொற்றநோய் பரவி மக்கள் பல நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.இறால் பண்ணை செயல்படுவதால் ஒட்டுமொத்த கிராமமும் உயிருடன் கொல்வதற்கு சமமாகும். இறால் பண்ணை கழிவுகளாலும், இறால் குஞ்சுகளின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் கெமிக்கல் நிலத்தடி நீரை மாசு படுத்துகிறது. அரசு இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும். இல்லையென்றால் கிராமத்தை விட்டு மக்கள் வெளியேற வேண்டும். கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தியும், அதிகாரிகளிடம் மனுக்களை அளித்தும் உள்ளோம். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி தாமதப்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

 கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் கருணாமூர்த்தி, சிஐடியூ மாவட்டச் செயலர் சிவாஜி ஆகியோர் கூறுகையில், அனுமதியின்றி, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் செயல்படும் இறால் பண்ணைகளை மூட வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தி விட்டோம். தற்போது கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பெண்கள், குழந்தைகளுடன் வந்து ராமநாதபுரம் கலெக்டரை சந்திக்க வந்துள்ளோம். தேர்தல் நடத்தை விதிகளால் கலெக்டர் நேரடியாக மனுவை பெறமாட்டார் என போலீசார் கூறினர். எஸ்பியை சந்தித்து மனுவை அளித்துள்ளோம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என்றனர். வட்டாணம் கிராமத்திலிருந்து ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் மீனவர்கள் மனு அளிக்க வந்திருந்தனர். கலெக்டரை சந்தித்தபின்தான் செல்வோம் என கூறி வளாகத்தில் நீண்டநேரம் காத்திருந்தனர். தேர்தல் விதிமுறையால் கலெக்டரை சந்திக்க முடியாது என காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து மனுவை எஸ்பியிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடு்ங்கள் என கூறி சென்றனர்.

Tags : Shrimp farms ,
× RELATED சட்டவிரோதமாக, அனுமதியின்றி...