×

வீரகனூர் பகுதியில் தொடர்கதையாகும் திருட்டு சம்பவங்களால் மக்கள் பீதி

கெங்கவல்லி, மே 7:  வீரகனூர் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வீரகனூரில் கடந்த 2 மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களை குறிவைத்து மர்ம நபர்கள் திருடி செல்வது வாடிக்கையாகி விட்டது. கடந்த 22ம் தேதி, வீரகனூரைச் சேர்ந்த மாதேஸ்வரன், ராஜேந்திரன் ஆகியோரின் டூவீலர்கள் திருடு போனது. இருவரும் அளித்த புகார்கள் மீது வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால், இணையதளம் வழியாக அவர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று மாலை, வீரகனூர் அம்பேத்கர் நகர் 3வது வார்டைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது டூவீலரை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதனையும் வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

நேற்று முன்திvனம், வீரகனூர்-தலைவாசல் சாலையில் காரில் வந்த கொள்ளையர்கள் கோயிலில் இருந்த குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களையும், ராஜபாளையத்தில் இருந்த ஒரு கோயிலிலும் ₹10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்தும் போலீசார் வழக்குபதிவு செய்யவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த 2 மாதமாக வீரகனூர் பகுதியில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேசனுக்கு புகார் அளிக்கச் சென்றால், வழக்கு பதிவு செய்யாமல் போலீசார் அலைகழித்து வருகின்றனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி புகார் கொடுக்காமலேயே திரும்பி விடுகின்றனர். எனவே, மாவட்ட எஸ்பி வீரகனூர் போலீஸ் ஸ்டேசன் மீது தனி கவனம் செலுத்தி, புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்,’ என்றனர்.

Tags : theft incidents ,area ,Veeraganur ,
× RELATED வீரகனூர் அருகே மது விற்ற வாலிபர் கைது