×

வாழப்பாடி அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து பெண்கள் மறியல்

வாழப்பாடி, மே 7: வாழப்பாடி அருகே, குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறை பிடித்த பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாழப்பாடி அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு, ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு மூலம் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றியது. இதனால், கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

சுமார் 3 கிலோ மீட்டர் நடந்து சென்று, தண்ணீர் பிடித்து வரும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும், 40க்கும் மேற்பட்ட பெண்கள் வாழப்பாடி-கருமந்துறை சாலையில், நேற்று காலை அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த ஏத்தாப்பூர் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : resort ,
× RELATED கொடைக்கானலில் ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர் சங்க கூட்டம்