×

ராமநாயக்கன்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

நாமக்கல், மே 7: நாமக்கல் அடுத்த ராமநாயக்கன்பட்டியில், புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. நாமக்கல் அடுத்துள்ள ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் செல்வம் என்பவர் கிராம மக்கள் சார்பில், நேற்று  நாமக்கல்  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டம் ராமநாயக்கன்பட்டி, கடந்தப்பட்டி, பாச்சல், குள்ளப்பநாயக்கன்பட்டி,  கதிராநல்லூர், முருங்கைப்பட்டி மற்றும் பொடேரிப்பட்டி ஆகிய கிராமங்களில், சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து  வருகின்றனர். இங்கும் வசிக்கும் மக்கள் பெரும்பாலம் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து,  தங்கள் அன்றாட வாழ்கையை நடத்தி  வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாயக்கன்பட்டியில் அரசின் டாஸ்மாக் கடை அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடை அமையும் இடத்தின் வழியாக அரசு பள்ளிக்கு மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். மேலும், அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு கடை திறக்கப்பட்டால் மாணவிகள் மற்றும் பக்தர்கள் பாதிக்கப்படுவர்.

மேலும், நாள்தோறும் கூலிவேலை செய்பவர்கள்,  கிடைக்கும் வருமானத்தை டாஸ்மாக் கடையிலேயே  செலவழிக்கும் சூழல்  உருவாகும். எனவே, மாவட்டம் நிர்வாகம் ராமநாயக்கன்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் திட்டத்தை கைவிட உத்தரவிட வேண்டும். டாஸ்மாக் கடை அமைத்து, அதன் மூலம் அரசு வருவாயை  ஈட்டுவதாக இருந்தால், அதற்கு மாறாக, எங்கள் அடிப்படை தேவையாக இருக்கும்  ரேஷன் பொருட்களை விட்டு கொடுக்கவும் மக்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.

Tags : shop ,Ramanaickenpatti ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி