×

18 வயதிற்கு கீழ் டூவீலர் ஓட்டிய சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம் போலீசார் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல், மே 7: திண்டுக்கல்லில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை மோட்டார் சைக்கிள்கள் ஓட்ட அனுமதித்த பெற்றோர்களுக்கு அபராதம் விதித்து போக்கு வரத்துபோலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.திண்டுக்கல் நகர், புறநகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் மூன்று பேர் பயணம் செய்தல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ்குமாருக்கு புகார் வந்தது. இதையடுத்து நேற்று நகரின் முக்கிய வீதிகளில் பிரகாஷ்குமார் தலைமையிலான போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்துடன் மோட்டார் சைக்கிளில்களில் மூன்று பேர் பயணம் செய்கின்றனரா என கண்காணித்தனர். இதில் 30 மோட்டார் சைக்கிளில்களில் தலா மூன்று பேர் வந்தனர்.
 
அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், 20 மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கும் ரூ.300 முதல் ரூ.500 அபராதம் விதித்தனர். மீதமுள்ள 10 பேர் ஓட்டுனர் உரிமம் இல்லாத 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களாக இருந்தனர். இதையடுத்து அவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டுபோலீஸ் ஸ்டேஷன் வருமாறு அழைத்தனர். பின்பு ஸ்டேஷன் வந்த பெற்றோரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாமல், வாகனம் ஓட்ட அனுமதித்ததால்தான் விபத்துக்கள் அதிகம் நடக்கிறது. இதனால் சிறுவர்களை வாகனம் ஓட்டக்கூடாது என எச்சரிக்கை செய்தனர். மேலும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மோட்டார் சைக்கிள்களை ஓட்ட அனுமதித்ததற்காக, பெற்றோர்களுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை அபராதம் விதித்தனர். இதேபோல் சரக்குவாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்ததாக 15 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்யவும், மோட்டார் வாகன ஆய்வாளருக்கு போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்தனர். முகப்பு விளக்குகளில் கருப்பு பட்டை இல்லாமல் வந்த 70க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி கருப்பு பட்டையை போலீசார் ஒட்டினர். திண்டுக்கல் நகர் பகுதிகளில் சாலை விபத்துக்களால் உயிர் இழப்பு ஏற்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : boys ,parents ,
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு