×

ராசிபுரம், பேளுக்குறிச்சியில் சூறைக்காற்றுடன் கனமழை; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

சேந்தமங்கலம்,  மே 7:  ராசிபுரம் மற்றும் பேளுக்குறிச்சியில் நேற்று மாலை திடீரென  சூறைக்காற்றுடன் கனமழை  பெய்தது. பேளுக்குறிச்சியில் சாலையில்  பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளுக்குள்  புகுந்தது. நாமக்கல் மாவட்டத்தில், 104 டிகிரி வரை வெயில் பதிவாகி வருகிறது. பகல் நேரங்களில் அனல்காற்று  வீசுகிறது. சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சியில், நேற்று காலை முதலே  வெயில் சுட்டெரித்தது. மாலை 4 மணிக்கு மேல் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத்தொடங்கியது.

அரைமணி நேரம் பெய்த கனமழையால், பேளுக்குறிச்சி பகுதியில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பேளுக்குறிச்சி பஸ் ஸ்டாப்பில் இருந்து  பழனியப்பா கோயில் செல்லும் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான  பகுதியில் இருந்த வீடுகளுக்குள் புகுந்தது. சாக்கடையில் அடைப்பு  ஏற்பட்டதால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து தெருக்களில் ஓடி, கடும்  துர்நாற்றம் வீசியது. இதனால், சாலையில் நடந்து சென்றவர்கள் மற்றும் டூவீலர்களில் சென்றவர்கள்  பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ராசிபுரத்தில், நேற்று மாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  ராசிபுரம் புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில், சூறைக்காற்றுக்கு  கடைகளின் தகர ஷீட்டுகள் காற்றில் பறந்தது. சாலையில் வைத்திருந்த பிளக்ஸ்  போர்டுகள் சாய்ந்தும், கிழிந்தும் சேதமாகின. சில இடங்களில் மரக்கிளைகள்  முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Tags : Rasipuram ,rainfall ,bedroom ,houses ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து