கிருஷ்ணகிரியில் முத்துமாரியம்மன் கோயில் விழா இன்று தீர்த்தக்குட ஊர்வலம்

கிருஷ்ணகிரி, மே 7:  கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர், 8வது குறுக்குத்தெருவில் உள்ள ராஜகாளியம்மன், முத்துமாரியம்மன் கோயில் 16ம் ஆண்டு விழா நேற்று(6ம் தேதி) காலை மங்கள இசை முழங்க கொடியேற்றுதல், காப்பு கட்டுதல், கங்கனம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. மாலை பெண்களுக்கான சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

விழாவின் 2ம் நாளான இன்று(7ம் தேதி) காலை 7 மணிக்கு கங்கையில் இருந்து பால், தயிர், மஞ்சள், குங்குமம், பன்னீர், சந்தனம், இளநீர் ஆகியவை குடங்களில் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக புறப்பட்டு வந்து அம்மனுக்கு அனைவரும் அவரவர்கள் கையால் அபிஷேகம் செய்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சுத்தி புண்ணியாவாஜனம் மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு சக்தி அழைத்தல் பூஜையும், இரவு 8 மணிக்கு வீடு, வீடாக சென்று கரகத்திற்கு பூ எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

3ம் நாளான வரும் 9ம் தேதி காலை 5 மணிக்கு கங்கையில் கரகம் அலங்காரம் செய்தல், 11 மணிக்கு மா விளக்குடன் கரகம் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனையுடன் மகா தீபாராதனை நடைபெறுகிறது. 4ம் நாளான 9ம் தேதி காலை 6 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன், கரகம், கங்கையில் விடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

Tags : Muthuramaniyanam ,festival ,Krishnagiri ,
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா