×

போச்சம்பள்ளி பகுதியில் பனை வெல்லம் உற்பத்தி தீவிரம்

போச்சம்பள்ளி, மே 7:  போச்சம்பள்ளி பகுதியில் பனை வெல்லம் உற்பத்தி தீவிரமடைந்துள்ள நிலையில், விலையை குறைத்து கொள்முதல் செய்வதால் பனை தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர். போச்சம்பள்ளி பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் பனை தொழிலையே நம்பி உள்ளனர். வருடத்திற்கு ஒருமுறையே சீசன் என்பதால், பனை தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பெங்களூரு, ஆந்திரா, பாண்டிசேரி, திருவண்ணாமலை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று விடுகிறார்கள்.

தற்போது, பனை சீசன் தொடங்கியுள்ளதால் சொந்த ஊருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். போச்சம்பள்ளி, மத்தூர், களர்பதி, மலையாண்டள்ளி, ஆனந்தூர், திருவணப்பட்டி, சாணிப்பட்டி, கவுண்டனூர், திப்பனூர், புளியாண்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், பனை தொழிலாளர்கள் குடும்பத்தோடு பனை வெல்லம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வருடம் ஒரு கிலோ பனை வெல்லம் ₹200க்கு விற்பனையானது. இந்தாண்டு ஒரு கிலோ ₹120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து பனை வெல்ல வியாபாரிகள் கூறுகையில், ‘சில பனை தொழிலாளர்கள் பனை வெல்லத்தில் சர்க்கரை கலந்து விற்பனை செய்கிறார்கள். நாட்டு சர்க்கரை கிலோ ₹40க்கு வாங்கி, அதை பனை வெல்லத்தில் கலந்து உற்பத்தி செய்யும்போது கூடுதலாக வருவாய் கிடைப்பதால் அதுபோல் செய்கிறார்கள். இதனால், பனை வெல்லத்திற்கான விலையை குறைந்து வாங்கும் நிலை ஏற்படுகிறது,’ என்றனர்.

இதுகுறித்து பனை தொழிலாளர்கள் கூறுகையில், ‘நாங்கள் பெங்களூரு, பாண்டிச்சேரி மற்றும் திருப்பூர் போன்ற பகுதிக்கு குடும்பத்துடன் கூலி வேலைக்கு செல்கிறோம். வருடத்திற்கு ஒரு முறை, சீசன் நேரத்தில் சொந்த ஊருக்கு வந்து பனை வெல்ல தொழிலை செய்கிறோம். சில தொழிலாளர்கள் நாட்டு சர்க்கரையை கலந்து உற்பத்தி செய்வதை காரணம் காட்டி, அனைத்து தொழிலாளர்களிடமும் வியாபாரிகள் குறைந்த விலைக்கு வெல்லத்தை வாங்குகிறார்கள். வியாபாரிகளுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. கலப்பட வெல்லத்தை பார்த்தாலே தெரிந்து விடும். ஆனால், அனைத்து வெல்லத்திற்கும் ஒரே விலை கொடுப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. இதனால், எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது,’ என்றனர்.

Tags : area ,Pochampalli ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...