×

சூளகிரி அருகே மல்லி, தக்காளி தோட்டத்தில் யானை கூட்டம் அட்டகாசம்

சூளகிரி, மே 7: ஓசூர் அருகே, சானமாவு வனப்பகுதியில் கடந்த 6 மாதங்களாக 20 யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த யானைகள் பல குழுக்களாக பிரிந்து ஓசூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் முகாமிட்டு, விளை பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த வாரம் கதிரேப்பள்ளி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகள், தொழிலாளி ஒருவரை தாக்கி கொன்றன. மனித உயிருக்கும், பயிர்களுக்கும் சேதம் விளைவிக்கும் யானைகளை வனத்துறையினர் போராடி விரட்டினாலும்,  வனப்பகுதிக்கு செல்வதே இல்லை. இந்நிலையில், இந்த 20 யானைகளும் கோலார் வனப்பகுதிக்கு சென்ற நிலையில், இதில் 6 யானைகள் கடந்த ஒரு வாரமாக வேப்பனஹள்ளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. 7 யானைகள் சானமாவு வனப்பகுதியிலேயே முகாமிட்டு ராமாபுரம், ஆழியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தன.

நேற்று அதிகாலை, 7 யானைகளும் சூளகிரி அருகே உள்ள வரதாபுரம் கிராமத்திற்குள் புகுந்தன. அங்கு கோவிந்தன், லட்சுமப்பா, வெங்கடேசன், முனியப்பா உள்ளிட்ட விவசாயிகளுக்கு சொந்தமான தோட்டங்களுக்குள் நுழைந்து 3 ஏக்கரில் பயிரிட்டிருந்த தக்காளி, அரை ஏக்கர் கொத்தமல்லி, 4 ஏக்கர் ராகி உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், பொதுமக்களுடன் இணைந்து யானைகளை வரதாபுரம் பகுதியில் இருந்து விரட்டியடித்தனர். தற்போது இந்த யானைகள், எலசேபள்ளி பகுதியில் முகாமிட்டுள்ளன. யானை கூட்டம் ஊருக்குள் வருவதை தடுக்க, வனப்பகுதிகளில் தேவையான உணவு மற்றும் தண்ணீர் வசதி செய்து தர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mali ,elephant meeting ,Sulagiri ,garden ,
× RELATED மாலி நாட்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 31 பேர் பலி